Published : 31 Aug 2021 03:50 PM
Last Updated : 31 Aug 2021 03:50 PM

'நமது வெற்றி அந்நியப் படைகளுக்கு ஒரு பாடம்': காபூல் விமானநிலைய ஓடுதளத்தில் தலிபான்கள் கொண்டாட்டம்

நமது வெற்றி அந்நியப் படைகளுக்கு ஒரு பாடம் என்று விமானநிலைய ஓடுதளத்தில் தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் கடந்த 15 ஆம் தேதியன்று முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதன்பின்னர் அங்கிருந்து ஒரு லட்சத்துக்கும் மேலானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 31 ஆம் தேதியை அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கான கடைசி நாள் என்று தலிபான்கள் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில், ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிவிட்டன. இதனைக் கொண்டாடும் விதத்தில் தலிபான்கள் காபூல் விமானநிலையத்துக்குச் சென்றனர். விமான நிலையத்தின் ஓடுதளத்தில் துப்பாக்கியுடன் குவிந்த தலிபான்கள் வானத்தை நோக்கிச் சுட்டுக் கொண்டாடினர்.

பின்னர் பேசிய தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத், "இஸ்லாமிய ஆப்கன் அமீரகம் இனி சுதந்திரமான நாடு. இதில் நாம் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம். அமெரிக்கா தோற்றுவிட்டது. இந்நிலையில், எங்கள் நாட்டின் சார்பாக நாங்கள் உலகின் பிற நாடுகளுடன் நல்லுறவை பேண விரும்புகிறோம். ஆப்கன் மக்களின் சுதந்திரம் போற்றப்படும். இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு ஆட்சி நடைபெறும். நமது வெற்றி அந்நியப் படைகளுக்கு ஒரு பாடம். தலிபான் படைகள் கண்ணியமாக நடந்து கொள்ளும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஆப்கன் நேரப்படி நள்ளிரவுக்கு முன்னதாகவே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கனில் இருந்து வெளியேறிவிட்டதாக அமெரிக்க மத்திய கமாண்ட் தலைவர் பிராங் மெக்கன்சி தெரிவித்தார். நாங்கள் அங்கிருந்து வெளியேற விருப்பப்பட்ட அனைவரையும் வெளியே அழைத்துவர முடியவில்லை. ஆனால், நாங்கள் அங்கே இருந்திருந்தாலும் கூட விரும்பியவர்களை வெளியே அழைத்துவர முடிந்திருக்காது என்று கூறினார்.

விமான நிலையம் இயங்குமா?

காபூல் சர்வதேச விமான நிலையத்தை தலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்ட நிலையில், அனைவரின் பார்வையும் விமான நிலையம் இனி இயங்குமா என்ற கோணத்தில் திரும்பியுள்ளது. ஆப்கனில் இன்னும் சில வெளிநாட்டவர் சிக்கியுள்ளனர். குறிப்பாக குறைந்தது 100 பேர் கொண்ட அமெரிக்கர்களும் உள்ளனர். அவர்களை வெளியேற்ற முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் குழுவானது திங்கள்கிழமை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தில் வரும் நாட்களில் ஆப்கனில் இருந்து மக்கள் வெளியேற சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று தலிபான்களுக்குக் கோரப்பட்டது.அதுபோல் ஐ.நா. மற்றும் பிற தொண்டு அமைப்புகளுக்கு ஆப்கானிஸ்தான் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.இனி காபூல் விமான நிலையத்தை இயக்குவது யார் என்ற பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

துருக்கி அரசு விமான போக்குவரத்து சேவையைக் கையாண்டால் தாங்கள் பாதுகாப்பு விஷயங்களைக் கண்காணித்துக் கொள்வதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் துருக்கி அதிபர் எர்டோகன் இதுவரை இதற்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x