

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளைக் குறிவைத்து ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ராக்கெட்டுகளின் இலக்கு அமெரிக்க படைகளா? இல்லை அப்பாவி பொதுமக்கள் என்பது தெரியவில்லை ஆனால் ராக்கெட்டுகள் சத்தம் காதைப் பிளக்கிறது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காபூலின் வடக்குப் பகுதியில் இருந்து இந்தத் தாக்குதல் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஹமீது கர்சாய் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள கட்டிடங்களை மறைக்கும் அளவுக்கு புகை மேலெழும்பி வருகிறது.
அமெரிக்கப் படைகள் மிஸைல் டிஃபன்ஸ் சிஸ்டம் மூலம் ராக்கெட்டுகளை இடைமறித்து வீழ்த்தி வருகிறது. இதுவரை ஐந்து ராக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன,
கடந்த 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசம் வந்தது. அதன் பின்னர் அங்கிருந்து மக்கள் அலை கடலென திரண்டு வெளிநாடுகளில் தஞ்சம் புக விமான நிலையத்தில் குவிந்தனர். இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தை மக்கள் நெருங்க முடியாத அளவுக்கு அப்பகுதி பதற்றமான பகுதியாக மாறியுள்ளது.
தலிபான்களின் எதிரி ஐஎஸ்ஐஎஸ்
தலிபான்களின் எதிரியான ஐஎஸ்ஐஎஸ் கோராசன் படைகள் தான் இந்தத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த வியாழக்கிழமை நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 175 பேர் பலியாகினர். முன்னதாக காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரித்திருந்த சில மணி நேரத்துக்குள்ளாக, அந்த விமான நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டில் ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
கார் வெடிகுண்டு தகர்ப்பு:
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா ட்ரோம் மூலம் கார் வெடிகுண்டு ஒன்றை தகர்த்தது. இதில் 3 குழந்தைகள் 6 பேர் இறந்தனர். இந்தச் சூழலில் ராக்கெட் குண்டுகள் அங்கே பொழிந்து வருகிறது. இதனால் விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதி பதற்றம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது.