Published : 30 Aug 2021 03:13 AM
Last Updated : 30 Aug 2021 03:13 AM

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரித்த சில மணிநேரத்தில் காபூல் விமான நிலையம் அருகே உள்ள வீட்டில் ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல்: குழந்தை உட்பட 2 பேர் உயிரிழப்பு; அமெரிக்க வீரர்கள் குவிப்பு

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரித்திருந்த சில மணி நேரத்துக்குள்ளாக, அந்த விமான நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டில் ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்கப் படைகளின் வெளியேற்ற அறிவிப்பை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் கடந்த 15-ம் தேதி கைப்பற்றினர். அங்கிருந்து அமெரிக்கர்களையும், அமெரிக்க படைகளுக்கு உதவிய ஆப்கன் மக்களையும் மீட்பதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வரும் 31-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என தலிபான்கள் கெடு விதித்துள்ளனர்.

முதல் தாக்குதல்

இந்த சூழலில், யாரும் எதிர்பாராத விதமாக, காபூல் விமானநிலையத்தில் கடந்த 26-ம் தேதிபயங்கர தற்கொலை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 170-க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள், 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு ஐ.எஸ். (கே) தீவிரவாதஅமைப்பு பொறுப்பேற்றது.

இதைத் தொடர்ந்து, ஆப்கனின் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா நேற்று முன்தினம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் எச்சரிக்கை

இதற்கிடையே, காபூல் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் மேலும் ஒரு தாக்குதலை நடத்தலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறும்போது, “காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டமாக இருக்கும்இடத்தில் இருந்து அமெரிக்கர்கள் விலகியிருக்க வேண்டும். அடுத்த 24 முதல் 36 மணிநேரத்துக்குள்ளாக காபூல் விமான நிலையத்தில் மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். காபூலில் உள்ள ஒரு ராணுவகமாண்டர் இத் தகவலை எனக்கு தெரிவித்தார். அமெரிக்க படையினர் பாதுகாப்பாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும். அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது’’ என்றார்.

ராக்கெட் தாக்குதல்

இந்நிலையில், ஜோ பிடன் எச்சரித்தது போலவே, காபூல் விமான நிலையம் அருகே உள்ளஒரு வீட்டில் நேற்று ராக்கெட் வெடிகுண்டு விழுந்து வெடித்து சிதறியது. இத்தாக்குதலில் அந்த வீட்டில்இருந்த ஒரு குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலையும் ஐ.எஸ். (கே) அமைப்பு தீவிரவாதிகளே நடத்தியிருக்கக்கூடும் என அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

விமான நிலையத்துக்கு குறி?

காபூல் விமான நிலையத்தை தாக்க வந்த ராக்கெட் வெடிகுண்டு, சற்று திசைமாறி அந்த வீட்டை தாக்கியிருக்கலாம் எனவும் உளவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலை அடுத்து,காபூல் விமான நிலைய சுற்றுப்பகுதிகளில் அமெரிக்க ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தலிபான்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x