

அமெரிக்கா - இந்தியா இடையேயான பேச்சுவார்த்தையை டெல்லியில் நடத்த வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் வார்னர் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மார்க் வார்னர் கூறியதாவது: அமெரிக்கா – இந்தியா இடையேயான அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை வாஷிங்டனில் நடத்துவதற்கு பதிலாக, டெல்லியில் நடத்தலாம். இது, இந்தியாவில் புதிதாக அமைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமையும்.
குஜராத் முதல்வராக இருந்தபோது, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நரேந்திர மோடி மிகுந்த முக்கியத்துவம் அளித்திருந்தார். சாலை, துறைமுகம் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டன. அவர் இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அடுத்த 5 ஆண்டுகள் நாடு முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முக்கியத்துவம் அளிப்பார். எனவே, இத்துறை சார்ந்த அமெரிக்க நிறுவனங்கள் வரும் காலத்தில் இந்தியாவில் அதிக முதலீடுகளை செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
விரைவில் இந்தியா வரவுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணைச் செயலாளர் (தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் பிரிவு) நிஷா தேசாய் பிஸ்வால் கூறுகையில், “பேச்சுவார்த்தைக் கூட்டத்தை டெல்லியில் நடத்தும் யோசனையை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இது தொடர்பாக இந்திய அரசுடன் ஆலோசனை செய்துதான் முடிவு எடுக்கப்படும்” என்றார்.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நட்புறவை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை ஆண்டுதோறும் டெல்லி அல்லது வாஷிங்டனில் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி பங்கேற்றார். இந்த ஆண்டுக்கான பேச்சுவார்த்தைக் கூட்டம் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.