ஐஎஸ் கோராசன் தீவிரவாதிகளில் 14 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்?- காபூலில் மேலும் ஒரு தாக்குதல் திட்டம் முறியடிப்பு

ஐஎஸ் கோராசன் தீவிரவாதிகளில் 14 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்?- காபூலில் மேலும் ஒரு தாக்குதல் திட்டம் முறியடிப்பு
Updated on
1 min read

காபூலில் நடந்த குண்டுவெடிப்புக்கு பின் அங்குள்ள துர்க்மெனிஸ்தான் தூதரகத்தை குண்டுவைத்து தகர்க்க ஐஎஸ் கோராசன் தீவிரவாதிகள் முயன்றுள்ள நிலையில் அதனை தலிபான்கள் தடுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஐஎஸ் கோராசன் தீவிரவாதிகளில் 14 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகள் சிரியா மற்றும் ஈராக்கில் தீவிரமாக செயல்பட்டபோது கேரள மாநிலம் மலப்புரம், காசர்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் இங்கிருந்து தப்பி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்தனர்.

இதில் சிலர் பின்னர் அங்கிருந்து ஆப்கானிஸ்தானுக்கு சென்றனர். ஐஎஸ் கோராசன் அமைப்பில் இணைந்தனர். இதற்காக ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்திற்குள் தங்கினர். ஆப்கானிஸ்தானை தலிபான்களிடம் இருந்து நேட்டோ படைகள் மீட்ட பிறகு அங்கிருந்த கேரளவைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

ஆப்கன் மீண்டும் தலிபான்கள் வசம் வந்த பிறகு பாக்ராம் சிறையில் இருந்தவர்கள் தலிபான்களால் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் குறைந்தது 14 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் அனைவரும் ஐஎஸ் கோராசன் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
இந்தநிலையில் காபூல் விமான நிலையம் அருகே நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 18 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 143 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஐஎஸ்-கோராசன் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. காபூல் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஆகஸ்ட் 26 அன்று காபூலில் உள்ள துர்க்மெனிஸ்தான் தூதரகத்தை குண்டு வைதது தகர்க்க ஐஎஸ் கோராசன் தீவிரவாதிகள் முயன்றுள்ளனர். ஆனால் அந்த அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் இருவரை தலிபான்கள் மடக்கி பிடித்துள்ளனர். இதனால் குண்டுவெடிப்பு தடுக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இணைந்து இந்த தாக்குதலை திட்டமிட்டதாக கூறப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த 14 பேரில் 13 பேர் காபூலில் இருந்து தப்பித்து மீண்டும் கோராசன் மாகாணத்துக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in