Published : 27 Aug 2021 07:54 PM
Last Updated : 27 Aug 2021 07:54 PM

காஷ்மீர் விவகாரம்; இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்: தலிபான்கள்

காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தலிபான்கள் முதல் முறையாக பதிலளித்துள்ளனர். இதுகுறித்து தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா கூறும்போது, “ஆப்கானிஸ்தான் மக்களின் நலன்களுக்கு ஏற்ப இந்தியா தனது கொள்கையை வகுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆப்கன் நிலத்தை வெளிநாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

காஷ்மீர் விவகாரம் குறித்த கேள்விக்கு, ''இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். இவ்விகாரத்தை இந்தியா நேர்மறையாக அணுக வேண்டும்'' என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றியதில் பாகிஸ்தானுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னணி

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குப் பின்னரும் கூட ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறலாம் எனத் தலிபான்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x