

ஆப்கனிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியபின் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், ஆப்கனில் அடுத்து என்ன நடக்கும் என உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
காபூல் விமான நிலையம் அருகே நேற்று நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 18 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 143 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஐஎஸ்-கோராசன் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பு பற்றிய முக்கிய தகவல்கள்:
யார் இந்த ஐஎஸ்-கோராசன்?
* ஐஎஸ்-கோராசன் அமைப்பு ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கோராசன் மாகாணத்தில் இயங்கும் முக்கிய தீவிரவாத அமைப்பாகும்.
* ஐஎஸ்-கோராசன் பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பில் இருந்து அதிருப்தியில் வெளியேறியவர்களும், ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்பில் இருந்து வெளியேறியவர்களும் சேர்ந்து உருவாக்கிய தீவிரவாத அமைப்பாகும்.
* தெற்கு ஆப்கானிஸ்தானில் அதிகளவில் இருக்கும் இந்த ஐஎஸ்-கோராசன் அமைப்பினர், ஒருகட்டத்தில் வடக்கு ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
* அமெரிக்க படைகளின் தாக்குதலாலும், தலிபான்களின் தாக்குதலாலும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இழந்தனர்.
* ஐஎஸ்-கோராசன் என்பது தலிபான்களை விட மிகவும் சிறிய அமைப்பாகும்.
* 1,500 முதல் 2,200 ஐஎஸ்-கோராசன் அமைப்பின் உறுப்பினர்கள் இருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
* சிரியா, ஈராக்கில் இயங்கி வந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் ஆப்கானிஸ்தானிலும் பரவினர். ஆனால் இவர்களை தலிபான்கள் கடுமையாக எதிர்த்தனர்.
* தலிபான்கள் தங்கள் வன்முறை போராட்ட களத்தை மற்றொரு அமைப்பு ஆக்கிரமிக்க விரும்பவில்லை. ஆப்கனில் தங்கள் கட்டுபாடு குறையும் என்பதும் ஒரு காரணம்.
* தலிபான்கள் என்பது பழங்குடி, தேசியவாத எண்ணம் கொண்ட ஆப்கானிஸ்தானை கட்டமைக்க விரும்பும் தீவிரவாத குழு. இதற்கு பாகிஸ்தான் ஆதரவு உண்டு.
* ஆனால் ஐஎஸ்-கோராசன் என்பது ஆப்கானிஸ்தான் என்ற தேசிய எல்லையை நம்பவில்லை. மொழி, இனம், நாடு கடந்து உலகளாவிய இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.
* அவர்கள் பாகிஸ்தான் தொடங்கி மேற்கு ஆசியா முழுமையையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்காக போராடுகிறார்கள்.
* தலிபான்கள் காபூலைக் கைப்பற்றி சிறைகளைக் கைப்பற்றியபோது அவர்கள் சிறையில் இருந்த தங்கள் அமைப்பினரை விடுவித்தனர்.
* அந்த சமயத்தில் தலிபான் எதிர்ப்பு தீவரவாதிகளும், பெருமளவில் வெளியே வந்துள்ளனர். அவர்கள் தற்போது ஐஎஸ் கோராசன் அமைப்பில் இணைந்துள்ளதாக தெரிகிறது.
* 2020-ம் ஆண்டு ஏப்ரலில் கோராசனி கைது செய்யப்பட்டதில் இருந்து ஷஹாப் அல் முஹாஜிர் இந்த அமைப்பை வழிநடத்தி வருகிறார்.
* காபூல் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு தலிபான்களுக்கும் - ஐஎஸ் கோராசன் அமைப்பினருக்கும் மோதல் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.