

பாகிஸ்தானில் உள்ள வழிபாட்டு தளமொன்றில் அன்னதான நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது பயங்கர குண்டு வெடித்தது. இதில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதிலிருந்து 14 கீ.மி. தொலைவில் உள்ள சுஃபி வழிபாட்டு தளத்தில் இன்று காலை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அங்கிருந்து 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். இதில் சிலர் அவசர நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பின்போது சம்பவ இடத்தில் இருந்த நபர் ஒருவர் கூறுகையில், "நான் பிரசாதம் பெறுவதற்காக கூட்டத்தில் நின்றுகொண்டிருந்தேன், அப்போது திடீரென காதை பிளக்கும் பயங்கர சத்தம் கேட்டதில் அங்கிருந்த அனைவரும் ஓட ஆரம்பித்தனர். ஆனால் எங்கிருந்தோ ரத்தம் வந்து என் முகத்தின்மீது சிதறியதில் தான் குண்டு வெடிப்பு நடந்ததை நான் உணர்ந்தேன்" என்றார்.
பாகிஸ்தானில் சில தினங்களுக்கு முன்பு வடக்கு வசாரிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று தலைநகர் இஸ்லாமாபாதில் நடத்தப்பட்டிருக்கும் இந்த குண்டு வெடிப்பு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.