

ஆபகன் விமானநிலையத்தில் நடந்த தாக்குதலில் சிக்காமல் இந்தியா வரவிருந்த 160 இந்துக்கள், ஆப்கன் சீக்கியர்கள் அடங்கிய குழு தப்பித்துள்ளது.
முன்னதாக நேற்று ஆபகனில் இருந்து வெளியேறுவதற்காக 160 இந்துக்கள், ஆப்கன் சீக்கியர்கள் அடங்கிய குழு காபூல் விமான நிலையம் நோக்கி வந்தது.
ஆனால், அவர்களை தலிபான்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களால் நாடு திரும்ப முடியவில்லை. ஆனால், நல்வாய்ப்பாக அவர்கள் விமான நிலையம் வராததால் நேற்றைய தாக்குதலில் இருந்து தப்பித்துள்ளனர்.
ஆப்கனிலிருந்து வெளியேற வேண்டாம் விரைவில் அமையவுள்ள இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவு கொடுங்கள் என்று தலிபான்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று விமான நிலையத்துக்கு வரவிடாமல் இதே காரணத்தைச் சொல்லியே இந்துக்கள், சீக்கியர்கள் அடங்கிய குழுவினரும் தடுக்கப்பட்டுள்ளனர்.
நேற்று அவர்களை மீட்கச் சென்ற விமானப் படை விமானமும் காபூல் விமான நிலையத்திலேயே காத்திருக்கிறது. 160 பேரும் குருத்வாரா ஒன்றில் பத்திரமாக இருப்பதாக டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் தலைவர் மன்ஜீந்தர் சிங் சிர்ஸா தெரிவித்துள்ளார்.
இதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து 565 பேரை இந்தியா மீட்டுள்ளது. இவர்களில் 175 பேர் தூதரக அதிகாரிகள், 263 பேர் இந்திய குடிமக்கள், 112 பேர் ஆப்கானிஸ்தான் நாட்டவர்.
விமானநிலையத்துக்கு வரும் வழியில் பல்வேறு புதிய சோதனைச் சாவடிகளை பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் தடுத்து நிறுத்துவதாலேயே மிட்புப் பணியில் சுணக்கம் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.