

காபூல் விமான நிலையத்தில் நேற்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் தாக்குதல் நடைபெறலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க மத்திய கமாண்ட் படையின் தலைவர் ஜெனரல் ஃபிரான்க் மெக்கென்ஸி கூறும்போது, "காபூல் விமானநிலையத்தில் இன்னும் தாக்குதல்கள் நடைபெறலாம். ராக்கெட் லாஞ்சர்கள் மூலமும் கார் அல்லது வேறு வாகனங்களில் வெடிகுண்டை நிரப்பியும் தாக்குதல் நடத்தப்படலாம். நாங்கள் எதையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கிறோம். அதிபர் ஜோ பைடன் பென்டகனுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் ஐஎஸ்ஐஎஸ்-கே (கொராஷன்) தீவிரவாதிகளைத் தாக்க தகுந்த திட்டம் வகுக்குமாறு கூறியுள்ளார்" என்றார்.
ரத்தக்களரியான கால்வாய்:
காபூல் விமான நிலையத்தைச் சுற்றிலும் ஒரு தண்ணீர் கால்வாய் இருந்தது. அதுதான் அங்குக் குழுமியிருந்தவர்களின் நீராதாரமாகவும் இருந்தது. அங்கே சடலங்கள் சிதறிக் கிடந்தன. மீன் பிடிப்பது போல் அங்கிருந்து சடலங்களை மீட்ட காட்சி மனதை உலுக்கியதாக காபூல் விமான நிலையத்தில் காத்திருந்த நபர் ஒருவர் கூறினார்.
மற்றொரு நபர் கூறுகையில், திடீரென பயங்கர சத்தம். நான் திரும்பிப்பார்க்கும் போது டொர்னடோவில் சிக்கி பிளாஸ்டிக் பைகள் பரப்பது போல் மனித உடல் பாகங்கள் பறந்தன. நான் அதிர்ந்து போனேன் என்று கூறினார்.
ஜுபைர் என்ற 24 வயது பொறியாளர் கடந்த ஒருவாரமாக காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கிறார். அவர் சம்பவம் நடந்தபோது தான் அந்த வாயிலுக்கு அருகிலேயே இருந்ததாகவும் நல்வாய்ப்பாக உயிருடன் இருப்பதாகவும் கூறினார்.
மீட்புப் பணிகள் தொடர்கிறது..
தீவிரவாத அச்சுறுத்தலுக்கு தலைவணங்காமல் மீட்புப் பணிகளைத் திட்டமிட்டபடி வரும் 31 ஆம் தேதி வரை தொடர்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த 12 நாட்களில் காபூலில் இருந்து 1 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல மேற்கத்திய நாடுகள் மீட்புப் பணியை முடித்துக் கொண்டதாக அறிவித்துவிட்டன. அமெரிக்கா மட்டும் 31 வரை தொடரும் எனக் கூறியுள்ளது.