காபூல் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்களை மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்:  ஜோ பைடன் எச்சரிக்கை

காபூல் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்களை மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்:  ஜோ பைடன் எச்சரிக்கை
Updated on
1 min read

காபூல் விமானநிலையத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம். தகுந்த பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

முன்னதாக, ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள ஹமீது கர்சாய் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே நேற்று மாலை 2 குண்டுகள் வெடித்தன. இதில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 60 பேர் பலியாகினர்.

இது குறித்து அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் கூறியதாவது:

இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களை நாங்க மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம். தகுந்த பதிலடி கொடுப்போம்.

நேற்றைய தாக்குதலில் உயிரிழந்த வீரர்களை நாங்கள் நினைவுகூர்கிறோம். அவர்கள் நிச்சயமாக போற்றுதலுக்குரிய நாயகர்கள். அவர்களைக் கவுரவிக்கும் வகையில் வரும் 30 ஆம் தேதி வரை அமெரிக்க தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.

ஆப்கானிஸ்தானில் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மீட்புப் பணிகள் நடைபெறும். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு எல்லாம் அடங்கிவிட மாட்டோம். எங்களின் மீட்புப் பணி தொடரும். இப்படி ஒரு தாக்குதல் நடக்கும் என்று தெரிந்திருந்தும், இனிமேலும் நடக்கலாம் என்று அறிந்திருந்தும் ராணுவ வீரர்கள் மீட்புப் பணியைத் தொடர்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் தலிபான்களுக்குக் கூட்டு இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.

ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு:

காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். விமான நிலையத்தில் மீட்புப் பணியில் உள்ள அமெரிக்க வீரர்களைக் குறிவைத்தே இந்த தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தனர். அமெரிக்காவும், நேற்று மாலை தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாகவே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளதாகவும் மக்கள் விமான நிலையத்திலிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 13 பேர் இறந்தனர். கடந்த 2011ல் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டபோது 30 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் அதிகபட்சமாக உயிரிழந்துள்ளது இதுவே முதன்முறை.

நேற்றைய தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 60 பேர் பலியாகினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in