Last Updated : 13 Feb, 2016 08:17 AM

 

Published : 13 Feb 2016 08:17 AM
Last Updated : 13 Feb 2016 08:17 AM

ஈர்ப்புக் கவர்ச்சி அலைகள் மூலம் விண்மீன்களின் கீச்சுக்குரலையும் இனி கேட்க முடியும்: விஞ்ஞானிகள் நம்பிக்கை

அண்டவெளியில் ஈர்ப்புக் கவர்ச்சி அலைகள் நிறைந்து இருப்பதற்கான ஆதாரங்களை அறிவியல் உலகம் கண்டறிந்துள்ளதை அடுத்து, விண்மீன்களின் கீச்சுக்குரல்களையும் இனி கேட்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அண்டவெளியில் சூரியனைப் போன்ற மிகப் பெரிய விண்மீன்கள் உள்ளன. அவை தங்களது வாழ்நாளின் இறுதியில் கருந்துளைகளாக மாறி, ஒன்றையொன்று சுற்றும்போது அண்ட வெளியில் அதிர்வுகள் ஏற்பட்டு ஈர்ப்பு அலைகளாக வெளியாகின்றன. இதனை நூறு ஆண்டுகளுக்கு முன்பே இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கணித்திருந்தார்.

அவரது கணிப்பை மெய்ப்பிக்கும் வகையில் அண்டவெளியில் ஈர்ப்புக் கவர்ச்சி அலைகள் நிறைந்து இருப்பதற் கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்திய விஞ்ஞானிகளும் இந்த ஆய்வுக்கு முக்கிய பங்காற்றியுள்ளனர். லிகோ (LIGO Advanced Laser Interferometer Gravitational Wave Observatory) விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள இந்த முக்கியமான ஆய்வு குறித்து வானியற்பியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்கான மஸாசூசெட்ஸ் தொழில்நுட்ப மையம் கூறியதாவது:

கடைசியில் ஈர்ப்பு அலைகளை கண்டுபிடித்துவிட்டோம். நூறு ஆண்டுகளுக்கு முன் சார்பியல் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு பெரும் நிறை உடைய பொருட்கள் ஒன்றை ஒன்று சுற்றி வந்தாலோ வெடித்துச் சிதறினாலோ ஈர்ப்புக் கவர்ச்சி அலைகள் வெளியாகும் என இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கணித்திருந்தார். அந்த கணிப்பு தான் தற்போது அடுத்த கட்டத்துக்கு இந்த ஆய்வை நகர்த்தி சென்றுள்ளது. முதன் முதலாக 2015 செப்டம்பரில் ஈர்ப்புக் கவர்ச்சி அலைகள் அண்டவெளியில் நிறைந்திருப்பது கண்டறியப்பட்டது. 30 சூரியன்களுக்கு ஒப்பான நிறை கொண்ட இரு கருந்துளைகள் ஒன்றையொன்று சுற்றியபோது, அதன் ஓசையை கேட்க முடிந்தது. இரு கருந்துளைகளும் மோதுவதற்கு முன்பாக ஒளியைவிட மிக வேகமாக சுற்றிக் கொண்டிருந்தன. அப்போது விஞ்ஞானம் உணர்வதற்கான ஈர்ப்புக் கவர்ச்சி அலைகள் தோன்றின. அந்த அலைகள் 150 கோடி ஒளி ஆண்டு களுக்கு அப்பால் இருந்து பூமியை வந்து சேர்ந்தது.

அண்டவெளியின் இந்த அற்புதத்தை லிகோவின் இரு கருவிகள் அப்படியே கிரகித்துக் கொண்டன. ஈர்ப்புக் கவர்ச்சி அலைகளின் ஓசை மனிதர்கள் கேட்கும் அளவுக்கு தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. கருந்துளைகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதால் எழுந்த ஒலியை, ஸ்பீக்கர்கள் மூலம் பூமியில் இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டனர். அந்த ஒலி ஊ….. என இருந்தது.

இந்த கண்டுபிடிப்பு மூலம் விண்மீன் கள் அமைதியானவை என்ற கருத்தி யல் நீண்டநாட்களுக்கு தாக்குப்பிடிக் காது. அதாவது இனி பிரபஞ்சத்தை வெறும் கண்களால் பார்ப்பதுடன் அதன் கீச்சுக்குரலையும் கேட்க முடியும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.-

முக்கிய பங்காற்றிய இந்திய விஞ்ஞானிகள்

அண்டவெளியின் ஈர்ப்புக் கவர்ச்சி அலைகளை கண்டறியும் ஆய்வில் சர்வதேச விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்தியாவின் 37 விஞ்ஞானிகளும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். குறிப்பாக இந்த அலைகளை எப்படி கண்டறிவது என்பதை புனேவில் உள்ள சர்வதேச வானியற்பியல் மற்றும் வானியல் பல்கலைக்கழக மையத்தின் விஞ்ஞானிகள் சஞ்சீவ் துரந்தர் மற்றும் சத்ய பிரகாஷ் இருவரும் வழி அமைத்துக் கொண்டுள்ளனர். இவர்களைத் தவிர மும்பை, புனே, பெங்களூரு ஆகிய அறிவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் இந்த கண்டுபிடிப்புக்கு உதவியுள்ளனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து ஈர்ப்பு அலைகளைக் கண்டறியும் உலகின் 3வது லிகோ மையத்தை இந்தியா ஆயிரம் கோடியில் விரைவில் அமைக்கவுள்ளது. புதிய கண்டுபிடிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடியும், பிரிட்டனின் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாவ்கிங்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு மூலம் பிரபஞ்சத்தில் உள்ள கருந்துளைகளின் ஒட்டுமொத்த வரலாற்றையும் கணிக்க முடியும் என்றும் விஞ்ஞானி ஸ்டீபன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x