

ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்தின் அருகே பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனை அமெரிக்காவின் பென்டகன் பாதுகாப்பு தளம் உறுதிப்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் இதுவரை 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆனால், அங்கு இன்னும் முறைப்படி ஆட்சி மாற்றம் நிகழவில்லை. இந்நிலையில், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் எனப் பல்வேறு நாடுகளும் ஆப்கனில் உள்ள தங்கள் நாட்டு மக்கள், தங்களுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் நாட்டவர், அந்நாட்டின் பொதுமக்கள் எனப் பலரையும் மீட்டு வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், காபூல் விமானநிலையத்துக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்தத் தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பிரிவினர் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. விமானநிலையத்தில் அபே கேட், கிழக்கு கேட், வடக்கு கேட் உள்ளிட்டப் பகுதிகளில் குழுமியிருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் ரோஸ் வில்சன் ஏபிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், காபூல் விமானநிலையத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் உறுதியானது. அதுகுறித்து தகவல்களை வெளியிடமுடியாது என்று ரோஸ் வில்சன் கூறியிருந்தார்.
பென்டகன் உறுதி:
இந்நிலையில், காபூல் விமானநிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதை அமெரிக்காவின் ராணுவ தளமான பென்டகன் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தனது ட்விட்டர் பக்கத்தில், "காபூல் விமானநிலையத்திற்கு வெளியில் குண்டு வெடிப்பு நடந்துள்ளதை உறுதிப்படுத்துகிறோம். ஆனால், அங்கு உயிரிழப்பு பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை. தகவல் கிடைத்தவுடன் தெரியப்படுத்துகிறோம்" என்று பதிவிட்டிருந்தார்.
அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது. ஆப்கனில் கடந்த 15 ஆம் தேதி தலிபான்கள் ஆதிக்கம் தொடங்கியதிலிருந்து இதுவரை 90,000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் விமானநிலையத்தைச் சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் காத்திருந்தனர். சிலர் மதில் சுவரை ஒட்டிய பகுதியிலேயே தங்கியிருந்தனர்.
ஐஎஸ்ஐஎஸ் கைவரிசையா?
ஐஎஸ்ஐஎஸ் ஆப்கன், பாகிஸ்தான் பிரிவு இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் பல்வேறு கோர தாக்குதல்களை நடத்தியுள்ளது. அப்பாவி பொதுமக்கள் என்றுகூட பாராமல் மசூதிகள், புனிதத் தலங்கள், பொது இடங்கள் ஏன் மருத்துவமனைகளிலும் கூட இந்தக் குழு தாக்குதல்களை நடத்தியுள்ளது. இவர்கள் பெரும்பாலும் சிறுபான்மையினர், ஷியா பிரிவு முஸ்லிம்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்துகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் போல் தலிபான்களும் சன்னி பிரிவு முஸ்லிம்கள் என்றாலும் கூட இந்த இரு குழுக்களும் எதிரெதிராக எதிரியாகவே செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமெரிக்க எச்சரித்ததுபோலவே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால் இது ஐஎஸ்ஐஎஸ் கைவரிசையாக இருக்குமோ என்று அஞ்சப்படுகிறது. மேலும், காபூல் விமானநிலையத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.