

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பிரிவினரால் காபூல் விமானநிலையத்திற்கு மிகப்பெரிய தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் பொதுமக்கள் அப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆனால், அங்கு இன்னும் முறைப்படி ஆட்சி மாற்றம் நிகழவில்லை. இந்நிலையில், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் எனப் பல்வேறு நாடுகளும் ஆப்கனில் உள்ள தங்கள் நாட்டு மக்கள், தங்களுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் நாட்டவர், அந்நாட்டின் பொதுமக்கள் எனப் பலரையும் மீட்டு வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், காபூல்விமான நிலையத்துக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்தத் தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பிரிவினர் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆப்கனில் கடந்த 15ஆம் தேதி தலிபான்கள் ஆதிக்கம் தொடங்கியதிலிருந்து இதுவரை 90,000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விமானநிலையத்தைச் சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் காத்திருக்கின்றனர். சிலர் மதில் சுவரை ஒட்டிய பகுதியிலேயே தங்கியுள்ளனர். இந்நிலையில், விமானநிலையத்தில் அபே கேட், கிழக்கு கேட், வடக்கு கேட் உள்ளிட்டப் பகுதிகளில் குழுமியிருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய வெளியுறவு விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "காபூலில் உள்ள ஹமீது கர்சாய் சர்வதேச விமானநிலையத்திற்குச் செல்ல வேண்டாம். ஒருவேளை நீங்கள் அந்தப் பகுதியில் இருந்தால் உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள். அடுத்த அறிவிப்பு வரும்வரை பாதுகாப்பான இடங்களில் இருங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பிரிட்டன் அரசும், ஒருவேளை ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற உங்களுக்கு வேறு வழி ஏதும் இருந்தால், அதனை உடனே செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் ஆப்கன், பாகிஸ்தான் பிரிவின் கோரமுகம்
ஐஎஸ்ஐஎஸ் ஆப்கன், பாகிஸ்தான் பிரிவு இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் பல்வேறு கோர தாக்குதல்களை நடத்தியுள்ளது. அப்பாவி பொதுமக்கள் என்றுகூட பாராமல் மசூதிகள், புனிதத் தலங்கள், பொது இடங்கள் ஏன் மருத்துவமனைகளிலும் கூட இந்தக் குழு தாக்குதல்களை நடத்தியுள்ளது. இவர்கள் பெரும்பாலும் சிறுபான்மையினர், ஷியா பிரிவு முஸ்லிம்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்துகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் போல் தலிபான்களும் சன்னி பிரிவு முஸ்லிம்கள் என்றாலும் கூட இந்த இரு குழுக்களும் எதிரெதிராக எதிரியாகவே செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.