Published : 13 Feb 2016 09:55 AM
Last Updated : 13 Feb 2016 09:55 AM

உலக மசாலா: ஓநாய் நண்பன்!

ப்ளோரிடாவின் சீக்ரெஸ்ட் ஓநாய் பாதுகாப்பு மையத்தில் வேலை செய்து வருகிறார் டேனியால். அங்கே 8 வயதான கெகோவா என்ற ஓநாய் மிகவும் அன்பாக மனிதர்களிடம் நடந்து கொள்கிறது. 7 அடி நீளமும் 52 கிலோ எடையும் கொண்ட பெரிய ஓநாயிடம் டேனியால் எந்தப் பயமும் இன்றி பழகுகிறார். ஓநாய் அவர் முகத்தோடு முகம் வைத்து உரசுகிறது, நாக்கால் முகத்தைத் தடவுகிறது. அவர் தோள் மீது காலைப் போட்டுக்கொள்கிறது.

‘‘இந்த ஓநாய்களுடன் வேலை செய்வது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கிறது. என்னிடம் இவ்வளவு அன்பாக ஓநாய் பழகுவதை நினைத்து, நான் பெருமைகொள்கிறேன். சாம்பல் ஓநாய்கள் அலாஸ்கா, கனடா, ஆசியாவில் அதிகம் வாழ்கின்றன. 6 முதல் 10 ஓநாய்கள் சேர்ந்து வசிக்கின்றன. வேட்டையாடும்போது ஒவ்வொன்றும் உதவி செய்துகொள்கிறன. விலங்குகளில் ஓநாய்கள் அற்புதமானவை’’ என்கிறார் டேனியால்.

உங்க தைரியத்துக்கு பாராட்டுகள்!

நியூயார்க்கில் வசிக்கும் கிறிஸ்டினா கார்டா வில்லா, தன்னுடைய 20 ஆண்டு கால திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்ததாக நம்பிக்கொண்டிருந்தார். ஆனால் கணவர் கேப்ரியல் வில்லா, கிறிஸ்டினாவை 20 ஆண்டுகளுக்கு முன்பே விவாகரத்து செய்துவிட்டார் என்ற விஷயம் சமீபத்தில்தான் அவருக்குத் தெரிய வந்தது. அதிர்ச்சியில் உறைந்துவிட்டார் கிறிஸ்டினா. 20 ஆண்டுகளுக்கு முன்பு 39 வயது கிறிஸ்டினா, தன்னை விட 30 வருடங்கள் மூத்தவரான 70 வயது கேப்ரியலைத் திருமணம் செய்துகொண்டார்.

‘‘இருவரும் நண்பர்களாக இருந்து, பிறகுதான் திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்குள் வயது வித்தியாசம் ஒரு பிரச்சினையாக வந்ததே இல்லை. ஒரு மகனும் பிறந்தான். நியூயார்க்கிலும் பாரிஸிலும் வாழ்ந்தோம். மிக சந்தோஷமான வாழ்க்கை என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். திருமணம் ஆன சில மாதங்களிலேயே எனக்குத் தெரியாமல் டொமினிகன் குடியரசில் விவாகரத்து வழக்குத் தொடர்ந்துவிட்டார். வழக்கு குறித்து எந்தத் தகவலும் எனக்கு வராமல் பார்த்துக்கொண்டார். நான் நீதிமன்றம் செல்லாமலே அவருக்கு விவாகரத்தும் கிடைத்துவிட்டது. அதற்குப் பிறகும் என்னுடன் 20 ஆண்டுகள் வாழ்க்கை நடத்தியிருக்கிறார். காரணம் அவரது சொத்து.

தன்னுடைய மூத்த மகளுக்கு நியூயார்க் வீட்டைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக என்னை விவாகரத்து செய்து, சொத்தில் உரிமை இல்லாதவளாக மாற்றிவிட்டார். வீட்டு வரியில் என்னுடைய பெயர் இல்லாததைச் சமீபத்தில்தான் கண்டுபிடித்தேன். 20 ஆண்டுகளாக ஓர் ஏமாற்றுக்காரரை நல்ல கணவர் என்று நம்பி வாழ்ந்திருக்கிறேன் என்பதுதான் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. என்னை ஏமாற்றிய கேப்ரியலை சும்மா விடப் போவதில்லை. எந்த சொத்துக்காக என்னை விவாகரத்து செய்தாரோ, அந்த சொத்தை விற்க நான் விடப் போவதில்லை. என் விவாகரத்து செல்லாது என்று வழக்குத் தொடுத்திருக்கிறேன். அதே நேரத்தில் அவர் எங்கள் மீது காட்டிய அன்பையும் அக்கறையையும் நான் பொய் என்று சொல்லவில்லை. இப்போது கூட மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் அவரைச் சேர்த்திருந்தோம். அருகில் இருந்து ஒரு மனைவியாக அத்தனையும் செய்திருக்கிறேன்’’ என்கிறார் கிறிஸ்டினா.

விநோதமான மனிதர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x