

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரோபாட்டிக்ஸ் பெண்கள் குழு மெக்சிகோவில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தனைச் சேர்ந்த இந்த இளம்பெண்கள் சர்வதேச அளவில் ரோபாட்டிக்ஸில் விருதுகளை வென்றவர்கள்.மேலும் கடந்த மார்ச் மாதம் குறைந்த விலையில் வெண்டிலேட்டர்களையும் உருவாக்கினர்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் வெளியேறி வருகின்றனர். ஆப்கனின் கடந்த காலங்களில் தலிபான்களின் ஆட்சியில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. எனவே எதிர்காலத்தின் மீதான அச்சம் காரணமாக இளம்பெண்களும் பிற நாடுகளில் அடைக்கலம் அடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆப்கனைச் சேர்ந்த பிரபல ரோபாட்டிக்ஸ் இளம் பெண்கள் குழு மெக்சிகோவுக்கு சென்றனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மெக்சிகோ வந்த அந்த இளம்பெண்களை அந்நாட்டின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் மார்த்த்கா டெல்கடோ விமான நிலையத்தில் வரவேற்றார்.
பின்னணி
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.