

டாக்டர்கள், இன்ஜினியர்கள் என பல்துறை நிபுணர்களை நாட்டைவிட்டு வெளியேறற வேண்டாம் அவர்களின் சேவை நாட்டு மக்களுக்குத் தேவை என அமெரிக்காவுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். அவர்களுக்குப் பயந்து லட்சக் கணக்கான மக்கள், ஆப்கனை விட்டு வெளியேற துடிக்கின்றனர். காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். அவர்களை வெளியேறக் கூடாது என்று தலிபான்கள் கூறி வருகின்றனர்.
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை:
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்களையும், தலிபான்களுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு துணையாக இருந்தவர்களையும், நாட்டைவிட்டு வெளியேற விரும்பும் பொதுமக்களையும் அமெரிக்கா அப்புறப்படுத்தி வருகிறது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்கா தனது மீட்புப் பணியை முடித்துவிட்டு முழுமையாக வெளியேற வேண்டும் என்று தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "நாட்டிலிருந்து மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற நிபுணர்களை வெளியேற்றுவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று எச்சரித்துள்ளார். மேலும், ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் மீட்புப் பணியை முடித்துக் கொள்ளுமாறும் அவர் எச்சரித்துள்ளார்.
ஆனால், ஐரோப்பிய நாடுகள் பலவும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அனைவரையும் அப்புறப்படுத்துவது சாத்தியமற்ற செயல் அதனால் இந்த கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஜபிப்புல்லா முஜாஹித்தோ, மேற்கத்திய நாடுகளிடம் விமான வசதி உள்ளது. அவர்கள் வசம்தான் இப்போது காபூல் விமான நிலையமும் உள்ளது. ஆதலால் அவர்கள் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அனைவரையும் மீட்டுச் செல்வது நலம் என்று மீண்டும் நெருக்கதலைக் கொடுத்துள்ளார்.
ஜெர்மனி அரசோ, ஆகஸ்ட் 31 என்பது மிகவும் குறுகிய காலக்கெடு. அதற்குள் அன்றாடம் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் கூட காத்திருப்போரை மீட்க முடியாது என்று தெரிவித்துள்ளது. காலக்கெடுவை நீட்டிக்க ஜி7 நாடுகள் முயற்சி எடுக்க வேண்டும் என ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ் தெரிவித்துள்ளார்.
தலிபான்கள் எந்தவொரு காலக்கெடு நீட்டிப்பையும் ஏற்கத் தயாராக இல்லை.