Published : 24 Aug 2021 06:31 PM
Last Updated : 24 Aug 2021 06:31 PM

பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்; படைகளில் வலுக்கட்டாயமாக குழந்தைகள்: அத்துமீறும் தலிபான்கள்; ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வேதனை

தலிபான்கள் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானின் மீது மெல்ல மெல்ல இறுகத் தொடங்கியுள்ளது.

அதை மெய்ப்பிக்கும் வகையில் பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது, தலிபான் படைகளில் வலுக்கட்டாயமாக குழந்தைகளைச் சேர்ப்பது என அத்துமீறல்களை கட்டவிழ்க்கத் தொடங்கிவிட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் குழு ஆணையர் மிச்செல் பேச்லெட் கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் இன்று ஆப்கானிஸ்தான் தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.

அந்தக் கூட்டத்தில் மிச்செல் பேச்லெட் பேசியதாவது:

தலிபான்கள் பெண்ணுரிமை மதிக்கப்படும் என்று கூறினர். பெண் குழந்தைகள் கல்வி கற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தனர். அந்த வாக்குறுதியை அவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று இத்தருணத்தில் நான் வேண்டுகிறேன். அதேபோல் மத ரீதியாக, மொழி ரீதியாக இன ரீதியாக உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். அவர்கள் என்ன கூறினார்களோ அதை நடத்திக் காட்ட வேண்டும். அதன் முழு பொறுப்பும் அவர்களின் தோள்களில் தான் உள்ளது.

பெண்களின் கல்வி, சுதந்திரம், அவர்களின் வேலைவாய்ப்பு ஆகியனவற்றை உறுதி செய்வதில் தலிபான்கள் தமக்குத் தாமே ஒரு கெடுவை விதித்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், தலிபான்களின் நடவடிக்கைகள் குறித்து ஆப்கனில் இருந்து வரும் செய்திகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. காபூல் விமான நிலையத்தில் இன்னமும் ஆயிரக்கணக்கில் குவியும் மக்கள் கூட்டம் அவர்கள் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. தலிபான் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றுவதற்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே அப்பாவி பொதுமக்கள் தீவிரவாதத்துக்கு இரையாவது அதிகரித்தது.
இப்போது, ஆப்கனில் இருந்து வரும் சில தகவல்கள் கவலையளிக்கின்றன. அங்கே கொத்துகொத்தாக அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதாகவும், பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், குழந்தைகளை தலிபான் படைகளில் வலுக்கட்டாயமாக சேர்ப்பதும் உறுதியாகியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்கான ஆப்கன் தூதர் நசீர் அகமது அந்திஷா கூறுகையில், தலிபான்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர்கள் தலிபான்கள் மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என எச்சரிக்குமாறும் கூறினார். அதுமட்டுமல்லாது ஆப்கானிஸ்தானில் கள நிலவரத்தை அறிய உண்மை கண்டறியும் குழுவை அங்கே அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x