

தலிபான்கள் குழந்தைகளையும், முதியவர்களையும் கடத்தி சென்று கேடயமாக பயன்படுத்துகின்றனர் என்று ஆப்கன் செயல் அதிபர் அம்ருல்லா சாலே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆப்கன் செயல்அதிபர் அம்ருல்லா சாலே கூறும்போது, “ அந்தராப் பள்ளத்தாக்கு பகுதியில் உணவுப் பொருட்கள் வருவதையும், பெட்ரோல் வருவதையும் தலிபான்கள் தடை செய்கின்றனர். மனிதாபிமான நிலை மோசமாக உள்ளது. ஆயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் மலைகளின் வழியாக தப்பிச் செல்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக தலிபான்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் கடத்திச் சென்று கேடயமாகப் பயன்படுத்துகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.
‘‘முன்னதாக, தலிபான்களிடம் சரணடையமாட்டேன். அவர்களுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டோம். இன்னொரு புதிய போருக்கு தயாராகவே இருக்கிறோம்’’ என்று அம்ருல்லா சாலே தெரிவித்திருந்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர்.