தலிபான்களுடன் போருக்குத் தயார்: அகமத் மசூத்
தலிபான்களுடன் சண்டையிடத் தயார் என்று தலிபான் எதிர்ப்பு முக்கியத் தலைவர்களில் ஒருவரான அகமத் மசூத் தெரிவித்துள்ளார்.
ஆப்கன் தலைநகர் காபூலைத் தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் தலிபான்களுக்கு எதிரான போரைத் தலிபான் எதிர்ப்பு முக்கியத் தலைவரான அகமத் மசூத் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அகமத் மசூத் கூறும்போது, “பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கிச் செல்வதற்கான முக்கிய வழி என்பதைத் தலிபான்களுக்கு உணர்த்த விரும்புகிறோம். போர் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எனினும் தலிபான்களுடனான போருக்கு நாங்கள் தயார். சர்வாதிகார ஆட்சியை எதிர்க்க விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.
ஆப்கனின் முக்கிய மலைப் பிரதேசமான பஞ்ச்ஷிர் மாகாணத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர் அகமத் மசூத். இவர் மறைந்த ஆப்கன் தலைவர் அகமத் ஷா மசூதின் மகன் ஆவார்.
1980களில் ஆப்கனில் நிலவிய சோவியத் எதிர்ப்புப் போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர் அகமத் ஷா மசூத். ஆப்கனின் தேசியத் தலைவராகக் கருதப்படுகிறார்.
