Last Updated : 24 Aug, 2021 10:42 AM

 

Published : 24 Aug 2021 10:42 AM
Last Updated : 24 Aug 2021 10:42 AM

இந்தியாதான் உண்மையான நட்பு நாடு: ஆப்கன் பாப் ஸ்டார் ஆர்யானா சயீது புகழாரம்

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் பிடியில் வந்தபின்னர் நாட்டைவிட்டு வெளியேறிய அந்நாட்டு பெண் பாப் நட்சத்திரமான ஆர்யானா சயீது, இந்தியா தான் உண்மையான நட்பு நாடு என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பித்துவிட்டாலும் கூட தான் இப்போது எங்கு இருக்கிறேன் என்பதை அவர் ரகசியமாகவே வைத்துள்ளார்.
இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், "ஆப்கானிஸ்தானின் இந்த நிலைமைக்கு நான் பாகிஸ்தானைத்தான் குற்றம் சொல்வேன். தலிபான்களை வளர்த்துவிட்டதே பாகிஸ்தான் தான். ஒவ்வொருமுறை அரசாங்கங்கள் தலிபான் தீவிரவாதியைக் கைது செய்யும்போதும் அவர் பாகிஸ்தானி என்பது உறுதியாகும்.

இனிமேலாவது ஆப்கானிஸ்தானின் அரசியல் விவகாரங்களில் பாகிஸ்தான் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சர்வதேச சமூகம், ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட தீர்வு காண வேண்டும். பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து ஆப்கன் விவகாரத்தில் தலையிடாமல் செய்ய வேண்டும்.

அதேவேளையில், இந்தியா எப்போதுமே பாகிஸ்தானுக்கு சிறந்த நண்பனாக இருந்துள்ளது. எங்கள் நாட்டின் மீது மக்களின் மீது அகதிகள் மீது அக்கறையுடன் செயல்பட்டுள்ளது. நாங்கள் இந்தியாவுக்குக் கடமைப்பட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஹிஜாப் அணியாமல் வெளியே வரக்கூடாது. பெண்கள் கல்வி கற்கவோ, வேலை செய்யவோ அனுமதிக்கக் கூடாது. சினிமா, எழுத்து உள்ளிட்ட கலைத்துறையில் ஈடுபடக் கூடாது என்பது தலிபான்களின் சட்டம். ஆனால், இதனை எதிர்த்து ஆர்யானா சயீது பாப் ஸ்டாராக உருவெடுத்தார். அவருக்கு எப்போதுமே தலிபான்களால் அச்சுறுத்தல் இருந்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலிபான்கள் பிடியில் வந்தபின்னர் நாட்டைவிட்டு வெளியேறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x