எதிர்ப்பாளர்களின் கூடாரத்தை நெருங்கிய தலிபான்கள்: பாஞ்ஷிர் பள்ளத்தாக்கையும் கட்டுக்குள் கொண்டுவர முனைப்பு

எதிர்ப்பாளர்களின் கூடாரத்தை நெருங்கிய தலிபான்கள்: பாஞ்ஷிர் பள்ளத்தாக்கையும் கட்டுக்குள் கொண்டுவர முனைப்பு
Updated on
1 min read

ஆப்கானிஸ்தான் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் குறிப்பாக பாஞ்ஷிர் பள்ளத்தாக்கில் தலிபான்கள் எதிர்ப்புக் குழுவினர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் அந்தப் பகுதியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக தலிபான் படைகள் அங்கு விரைந்துள்ளன.

பானோ, தே சாலே, புல் இ ஹெசார் ஆகிய பகுதிகளை தலிபான்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆகஸ்ட் 31ஆம் தேதி காபூலை தலிபான்கள் கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் பாஞ்ஷிர் பள்ளத்தாக்கிலிருந்து தான் முதல் எதிர்ப்புக் குரல் கிளம்பியது.

முதல் எதிர்ப்புக் குரல்:

தலிபான்களுக்கு எதிரான முதல் எதிர்ப்புக் குரல் என்று தான் அப்துல் மசூத், அமருல்லா சாலே ஆகியோரின் எச்சரிக்கையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஆப்கனின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பாஞ்ஷிர் பள்ளத்தாக்கு போராளிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1990களில் தலிபான்கள் ஆதிக்க சக்தியாக இருந்தபோதும்கூட பாஞ்ஷிரை அவர்களால் நெருங்க இயலவில்லை. சோவியத் படைகள் கூட அப்பகுதியை நெருங்க முடியாத அரணாக அகமது ஷா மசூத் வைத்திருந்தார். அம்ருல்லா சாலே அந்தக் கோட்டையில் இருந்து வந்தவர். தலிபான்களை நீண்ட காலமாக எதிர்த்து வருபவர். 1990களில் இளம் வயதில் இருந்தபோதே அவர் தனது பெற்றோரை இழந்தார். அப்போது முதல் அவர் மசூதுடன் இணைந்து தலிபான்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார். 1996ல் தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியபோது அவர் அங்கிருந்து தப்பினார். ஆனால், தலிபான்கள் சாலேவின் சகோதரியைக் கைது செய்து துன்புறுத்திக் கொலை செய்தனர். 1996 சம்பவம் தலிபான் மீதான தனது பார்வையை மாற்றியமைத்ததாக அவர் ஒரு முறை கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

அமருல்லா சாலே தலிபான்களுக்கு விடுத்த செய்தியில், ''நான் என்றும் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் தலிபான் தீவிரவாதிகளுக்குத் தலைவணங்க மாட்டேன். எனது தலைவர் அகமது ஷா மசூதின் மாண்புக்கு எப்போதும் நான் துரோகம் இழைக்க மாட்டேன். என் வார்த்தைகளை நம்பிய லட்சக்கணக்கான மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்க மாட்டேன். தலிபான்களுடன் ஒரே கூரையின் கீழ் ஒருமித்து வேலை செய்ய மாட்டேன்'' என்று தெரிவித்திருந்தார்.

அமருல்லாவும், அகமது மசூதும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியானது. இருவரும் கைகோர்த்து தலிபான் எதிர்ப்புப் படைக்கு தலைமை தாங்குவதும் உறுதியானது. இந்நிலையில் தான், பாஞ்ஷிர் பள்ளத்தாக்கை எங்களிடம் அமைதியாக ஒப்படைக்க அங்குள்ள உள்ளூர் தலைவர்கள் மறுப்பதால் இஸ்லாமிக் எமிரேட்டின் நூற்றுக்கணக்கான முஜாகிதீன்கள் அங்கு படையெடுத்துச் செல்கின்றனர் என தலிபான்கள் ட்விட்டரில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகீத் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "திங்கள்கிழமை நிலவரப்படி பதாக்‌ஷான், தக்கார், அண்டராப் ஆகிய மாவட்டங்களைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தலிபான்கள் தங்களின் முதல் எதிர்ப்பையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in