

உலகிலேயே இஸ்ரேல் நாடு தான் மிக வேகமாக தன் நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு கரோனா தடுப்பூசியை செலுத்தியது. அதேபோல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் இனி மாஸ்க் அணியத் தேவையில்லை என்றும் அறிவித்தது.
ஆனால், இன்றோ அதிகரித்துவரும் டெல்டா வைரஸ் காரணமாக ஒட்டுமொத்த நாடும் மீண்டும் திணறத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேலில் இப்போது கோடை காலம் நிலவுகிறது. இருப்பினும் அங்கு பொது இடங்களில் நுழைவதற்கு முன்னதாக குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது, சோஃபியா கோவிட் டெஸ்ட் எனப்படும் உடனடி பரிசோதனையை மேற்கொள்ள மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 வயது முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு இந்தப் பரிசோதனை கட்டாயம். ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் பொது இடங்கள், உணவகங்கள், பொது நீச்சல் குளங்கள், அருங்காட்சியங்களில் நுழைய கிரீன் பாஸ் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதற்காகவே தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாத குழந்தைகளுக்கு சோஃபியா டெஸ்ட் மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து ஷிரா எல்கின் என்ற இளம் தாய் ஒருவர் கூறுகையில், நான் எனது 4 வயது குழந்தைக்கு ஸ்வாப் எடுக்கக் காத்துக் கொண்டிருக்கின்றேன். என் குழந்தையை சமாதானப்படுத்த வேண்டும். சோதனை முடிவு 15 நிமிடங்களில் வந்துவிட்டாலும் கூட, 20 மணி நேரம் மட்டும் இந்த முடிவு நம்பகத்தன்மை வாய்ந்தது எனக் கூறுகின்றனர். ஆனால், ஒவ்வொரு நாளும் என் குழந்தையை வெளியில் அழைத்துச் செல்லும்போதும் இதே மாதிரியான பரிசோதனை செய்ய வேண்டுமென்றால் நான் என் தலைமுடியை பிய்த்துக் கொள்வேன் என்றார்.
டெல்டா வைரஸ் வேகமெடுக்க இதுதான் காரணமா?
இஸ்ரேலில் டெல்டா வைரஸ் வேகமெடுக்க அங்கு ஜூன் தொடக்கம் வரை முகக்கவசம் அணிவது முற்றிலுமாகக் கைவிடப்பட்டதை முக்கியக் காரணமாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இன்னொரு காரணமாக ஃபைஸர் தடுப்பூசியின் திறனும் கூறப்படுகிறது. இஸ்ரேலில் பரவலாக அனைவருக்கும் ஃபைஸர் தடுப்பூசியே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஃபைஸரைவிட மாடர்னா தடுப்பூசி அதிக திறன் கொண்டது. தடுப்பூசி தேர்வில் இஸ்ரேல் சறுக்கிவிட்டது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கரோனா தொற்றுக்காக கண்காணிப்பது மட்டுமே ஒரே தடுப்பு நடவடிக்கையாக இஸ்ரேல் கடைபிடித்து வருகிறது. அதனால், இப்போது இஸ்ரேலில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.4% ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கரோனா பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாடு 4வது ஊரடங்குக்குள் செல்வதிலிருந்து நிச்சயம் காப்பேன் என்றும் அந்நாட்டுப் பிரதமர் நாஃப்டாலி பென்னட் தெரிவித்துள்ளார்.