Published : 23 Aug 2021 09:09 AM
Last Updated : 23 Aug 2021 09:09 AM

ஆப்கனிலிருந்து வெளியேறியதை வரலாறு சரியான முடிவென பதிவு செய்யும்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை வரலாறு தர்க்க ரீதியாக சரியான முடிவு என்று பதிவு செய்யும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் அங்கு தலிபான்கள் கையில் ஆட்சி சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு குழப்பமும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு அமெரிக்கா தான காரணம் என்று உலக நாடுகள் பலவும் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிபர் ஜோ பைடன் பேசியிருப்பதாவது:

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை வரலாறு தர்க்க ரீதியாக சரியான முடிவு என்று பதிவு செய்யும்.

ஆப்கனில் அமைதி திரும்ப வேண்டுமென்றால், இனி தலிபான்கள் இனி தங்களின் முடிவை அறிவிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்களின் நலனுக்காக அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய ஆட்சியை கொடுப்பார்களா என்று தெரிவிக்க வேண்டும்.

ஆனால், இதுவரை இதுபோன்ற சிறிய ஆயுதம் ஏந்திய குழுக்கள் எதுவுமே இப்படியான முடிவை எடுத்ததில்லை. ஒருவேளை அவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை முன்மொழிந்தால் அதற்கு அவர்களுக்கு கூடுதல் உதவி தேவைப்படும். பொருளாதார, வர்த்தக ரீதியாக என பலதரப்பிலிருந்தும் உதவிகள் தேவைப்படும்.

அதற்காக, தலிபான்கள் உலக நாடுகள் தங்களது ராஜாங்க ரீதியான உறவை ஆப்கானிஸ்தானிலிருந்து முற்றிலுமாக துண்டித்திட வேண்டாம் என்றே கோரி வருகின்றனர். அவர்கள் தங்களை சட்டபூர்வமாக உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். ஆனால், அவர்கள் வார்த்தையில் எவ்வளவு உறுதித் தன்மை இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதுவரை தலிபான் படைகள் அமெரிக்கப் படைகள் மீது எவ்வித தாக்குதலும் நடத்தவில்லை. ஆனால், தலிபான் படைகளில் அனைவருமே ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அது இன்னும் சிறு சிறு குழுக்களாகவே இயங்குகிறது. அதனால் இது நீடிக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தலிபான்கள் வாக்கு எவ்வளவு உண்மையானது என்பதையும் காத்திருந்தே உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 14 தொடங்கி ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 28,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x