ஆப்கன் விவகாரம்: ஜெர்மனி - ரஷ்ய அதிபர்கள் ஆலோசனை

ஆப்கன் விவகாரம்: ஜெர்மனி - ரஷ்ய அதிபர்கள் ஆலோசனை
Updated on
1 min read

ஆப்கன் விவகாரம் தொடர்பாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலும், ரஷ்ய அதிபர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவுக்கு ஏஞ்சலா மெர்கல் வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொண்டார். ஜெர்மனி - ரஷ்யா இடையே உள்ள நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவரது பயணம் அமைந்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பில் ஆப்கனில் தலிபான்களின் ஆட்சி, ரஷ்யா - ஜெர்மனி இடையேயான வர்த்தகம், எல்லைப்புறப் பிரச்சினைகள் குறித்தும் ஏஞ்சலா மெர்கல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து ஏஞ்சலா மெர்கல் கூறும்போது, “எங்களிடம் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும் நாங்கள் இன்று ஒன்றாக அமர்ந்து ஆலோசனை நடத்தினோம். லிபியா, ஆப்கானிஸ்தான் தொடர்பாகவும் ஆலோசித்தோம். ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியின் பங்கு அளப்பரியது என்று ரஷ்ய அதிபர் புதின் நன்றி தெரிவித்தார்” என்றார்.

முன்னதாக, ஆப்கன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஏஞ்சலா மெர்கல் கடுமையாக விமர்சித்தார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

தற்போது ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தலிபான்கள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in