ஆப்கனில் புதிய அரசு; தலிபான் துணைத் தலைவர் காபூலில் பேச்சுவார்த்தை

ஆப்கனில் புதிய அரசு; தலிபான் துணைத் தலைவர் காபூலில் பேச்சுவார்த்தை
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக தலிபான்கள் அமைப்பின் துணைத் தலைவரான முல்லா அப்துல் கனி பரதர் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார். தலைநகர் காபூலில் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி வருவதாக தெரிகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் தலிபான்கள் அமைப்பின் துணைத் தலைவரான முல்லா அப்துல் கனி பரதர் ஆப்கனின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கன் உருஸ்கன் மாகாணத்தில் 1968 ஆம் ஆண்டு பிறந்த முல்லா அப்துல் கனி பரதர். ஆப்கனில் சோவியத் யூனியன் ஆட்சிக்கு எதிராக ஆப்கன் முஜாகிதீன் அமைப்புடன் இணைந்து சண்டையிட்டவர்.

சோவியத் யூனியன் வெளியேற்றத்துக்குப் பிறகு, 1994 ஆம் ஆண்டு முகமத் ஒமருடன் இணைந்து தலிபான் இயக்கத்தை ஆரம்பித்தவர்.

கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற அமெரிக்க அரசுடனான அமைதி பேச்சு வார்த்தையில் முதன்மை பங்கு வகித்தவர் இவர்.

ஆப்கனை தலிபான்கள் கைபற்றிய பிறகு முல்லா அப்துல் கனி பரதர் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கத்தாரிலிருந்து ஆப்கனுக்கு வருகை தந்திருக்கிறார்.

கடந்த ஜூலை மாதம் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ -யுடனான சந்திப்பை தலைமை ஏற்று நடத்திய முல்லா அப்துல் கனி தற்போது புதிய அரசு அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார்.

இதற்கான தலிபான்களின் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினரில் புதிய அரசு எப்படி அமைய வேண்டும், அதில் யார் யார் நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என்பது போன்ற அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in