Published : 21 Aug 2021 12:36 PM
Last Updated : 21 Aug 2021 12:36 PM

காபூலில் இந்திய விமானப்படை அதிரடி நடவடிக்கை; 85 இந்தியர்கள் மீட்பு

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படை மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை பலனளித்துள்ளது. காபூல் விமான நிலையத்தில் இருந்து 85 பேர் இன்று காலை மீட்கப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.

காபூலில் சிக்கியிருந்த இந்திய அதிகாரிகள், தூதரக ஊழியர்கள் உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு இந்தியா திரும்பினர். காபூலில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆப்கனில் பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். குறிப்பாக காபூலில் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அங்குள்ள இந்தியா அழைத்து வர தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தியா, அமெரிக்காவின் உதவியையும் நாடியது. காபூல் நகரம் முழுவதும் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் விமான நிலையம் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சுமார் 400 இந்தியர்கள் வரை இன்னும் அங்கு சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் அவர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படை அதிரடி திட்டம் ஒன்றை உருவாக்கியது. அதன்படி ஆப்கானிஸ்தானுக்கு அருகில் உள்ள தஜிகிஸ்தானில் இருந்து அடுத்தடுத்து இந்திய விமானங்களை இயக்கி அவர்களை மீட்டு வரவும், காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்காவின் உதவியுடன் இதனை நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒருமுறை சி17 விமானம் காபூல் சென்றால் குறைந்தது 250 பேரை மீட்டுக் கொண்டுவர முடியும். இதனால், காபூல் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கும்படி அமெரிக்காவின் உதவியை இந்தியா நாடியது.

ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கத் தயார் நிலையில் இந்திய விமானப்படையின் சி17 விமானம் நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள இந்தியர்கள் காபூல் விமான நிலையம் வரை வந்தால் மட்டும் போதும் அவர்களை தாயகம் அழைத்துவந்துவிடலாம் என அறிவிக்கப்பட்டு இந்தியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தயார் நிலையில் இருந்த விமானம் காபூலில் இருந்து இன்று காலை 85 இந்தியர்களுடன் புறப்பட்டது. பின்னர் அந்த விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக தஜிகிஸ்தானின் துஷான்பேவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவர்கள் டெல்லி அழைத்து வரப்படுகின்றனர்.

அடுத்த விமானம் தஜிகிஸ்தானில் இருந்து காபூல் நோக்கி செல்ல தயாராக உள்ளது. இந்த நேரத்தில் காபூலில் விமான நிலையத்திற்கு வெளியே குழப்பம் நிலவுவதாகவும், அதிகமான இந்தியர்களை விமான நிலையத்திற்குள் அழைத்து வருவதில் சிக்கல் நிலவுவதாகவும் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x