ஆப்கனில் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தல்: தலிபான்கள் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

ஆப்கனில் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தல்: தலிபான்கள் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பத்திரிகையாளர்களை துன்புறுத்துகின்றனர் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரஸ் கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் உள்ள பத்திரிகையாளர்களை தலிபான்கள் எல்லா நிலையிலும் துன்புறுத்துகின்றனர். அமெரிக்க பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகின்றனர். காபூலை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்றார்.

முன்னதாக தலிபான்கள் எங்களை பணிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை என்று காபூலில் பெண் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சி கிடையாது. ஷரியத் சட்டத்தின்படிதான் ஆட்சி நடக்கும் என்று தலிபான் தீவிரவாத அமைப்பின் நிர்வாகிகள் ஒருவரான வஹீதுல்லாஹ் ஹஷிமி சமீபத்தில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in