Published : 21 Aug 2021 07:00 AM
Last Updated : 21 Aug 2021 07:00 AM

தலைநகர் காபூலில் ஊரடங்கு அமல்; ஆப்கனில் இந்திய தூதரகங்கள் சூறை: பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. தலைநகர் காபூலில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டிருக்கிறது.

“தீவிரவாத ஆட்சி நீண்ட காலம் நிலைத்திருக்காது” என்று தலிபான்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் அந்த நாடு முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. தலைநகர் காபூலில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டிருக்கிறது. அவசர உதவி தேவைப்படுவோருக்காக மசூதிகளின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறி வெளியே வருவோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

விமான நிலையத்தில் குழப்பம்

காபூல் சர்வதேச விமான நிலையம் மட்டும் அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும் அந்த விமான நிலையத்தின் நுழைவுவாயில்கள் அனைத்திலும் தலிபான்கள் பாதுகாப்பு பணியின் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது காபூலில் இருந்து புறப்படும் விமானங்களில் வெளிநாட்டினர் செல்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக விமான நிலையத்தில் குழப்பம் நீடிக்கிறது. மக்கள்கூட்டத்தை கட்டுப்படுத்த அமெரிக்கபடையினரே துப்பாக்கிச்சூடு நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி வருகின்றனர்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 18,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேட்டோ படைகளுக்கு உதவிய சுமார் ஒரு லட்சம் ஆப்கானிஸ்தான் மக்களை உடன் அழைத்துச் செல்ல உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில ஆயிரம் பேர் மட்டுமே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் காபூல் விமான நிலைய வளாகத்தில் பரிதவித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் செயல்பட்ட பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவும் காபூலில் உள்ள தூதரகத்தை மூடிவிட்டது. அங்கு பணியாற்றிய தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் 140 பேர் சில நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டனர்.

காந்தகார், ஹிராத் ஆகிய நகரங்களில் உள்ள இந்திய துணை தூதரகங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை காந்தகார், ஹிராத் நகரங்களில் மூடப்பட்டுள்ள இந்திய துணை தூதரகங்களுக்குள் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்தனர். தூதரக கட்டிடத்தை சூறையாடினர். உள்ளே புகுந்துஆவணங்களை தேடிய தீவிரவாதிகள், அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கி நாசம் செய்தனர். இரண்டு இடங்களிலும் வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள், இரு சக்கர வாகனங்களை எடுத்துச் சென்றனர்.

பிரதமர் மோடி கண்டனம்

இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், சோமநாதபுரத்தில் உள்ள சோமநாதபுரம் சிவன் கோயிலில் புதிதாக கட்டப்பட உள்ள சிவபார்வதி கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

தீவிரவாதத்தால் மனித குலத்தை அடக்கி ஆள முடியாது. தீவிரவாதத்தை அடிப்படையாக வைத்து ஆட்சி நடத்துபவர்கள் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. நீதி, உண்மையை யாராலும் தோற்கடிக்க முடியாது.

கடந்த காலத்தில் சோமநாதர்கோயில் பல முறை இடிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வோரு முறையில் கோயில் மீண்டும் கம்பீரமாக எழுந்திருக்கிறது. இந்தஉதாரணம் ஒட்டுமொத்த உலகத்துக்கும் பொருந்தும்.

சுதந்திரத்துக்குப் பிறகு சோமநாதர் கோயில் கட்டுமானத்துக்காக ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபபாய் படேல், கே.எம். முன்ஷி உள்ளிட்ட தலைவர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்தனர். எனினும் அவர்கள் தங்கள் முயற்சியில் வெற்றி பெற்று சோமநாதர் கோயிலை பிரம்மாண்டமாக கட்டினர். நவீன இந்தியாவின் தெய்வீக தூணாக சோமநாதர் கோயில் விளங்குகிறது. தற்போது அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயில் நவீன இந்தியாவின் பிரகாசிக்கும் தூணாக, இந்தியாவின் பெருமையை பறைசாற்றும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தலிபான்களின் பெயரை குறிப்பிடாமல், தீவிரவாதத்தால் மனித குலத்தை அடக்கி ஆள முடியாது. தீவிரவாத ஆட்சி நீண்ட காலம் நிலைத்திருக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x