

ரஷ்யாவில் ஐ.எஸ். தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 2 போலீஸார் பலியாகினர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
ரஷ்யாவின் டகாஸ்டன் மாகாணம் டெர்பன்ட் நகரில் போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது. அங்கு நேற்று போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பிட்ட ஒரு வாகனத்தை சோதனை செய்த போது அது வெடித்துச் சிதறியது.
இதில் 2 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 6 போலீஸார் உட்பட 12 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிர வாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
சிரியாவில் முகாமிட்டுள்ள ரஷ்ய விமானப் படை, அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.
இதற்குப் பதிலடியாக கடந்த அக்டோபர் 31-ம் தேதி எகிப்தின் சினாய் பகுதியில் இருந்து ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு புறப்பட்ட ரஷ்ய விமானத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் தகர்த்தனர். இதில் 224 பேர் பலியாகினர்.
தற்போது ரஷ்ய பகுதியிலும் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளனர் என்று அந்த நாட்டு பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.