

ஆப்பிரிக்காவிலிருந்து அகதிகளுடன் ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்குச் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து ஸ்பெயின் நாட்டின் கடல்வழி மீட்புக் குழு கூறுகையில், "அட்லான்டிக் பெருங்கடலில் இருந்து 220 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. ஒருவாரத்துக்கு முன்னதாக ஆப்பிரிக்காவிலிருந்து 53 அகதிகளுடன் மீட்புப் படகு புறப்பட்டது. எதிர்பாராத விதமாக படகு விபத்துக்குள்ளானதில் 50 பேர் உயிரிழந்தனர்.
ஒரே ஒரு பெண் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். படகில் தொங்கியடி இருந்த அவரை மீட்புக் குழுவினர் மீட்டனர்" என்று தெரிவித்துள்ளது. மோசமான வானிலையால் கடல் சீற்றம் ஏற்பட்டு இந்த விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. மீட்கப்பட்ட ஒரே ஒரு பெண் ஹெலிகாப்டர் மூலமா லாஸ் பலமாஸில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
2021 ஆம் ஆண்டில் முதல் 6 மாதங்களில் ஸ்பெயினுக்குச் செல்லும் அட்லான்டிக் கடல் பாதையில் 250 பேர் படகுவிபத்தில் இறந்திருப்பதாக ஐ.நா புலம்பெயர் முகமை தெரிவித்துள்ளது.
ஸ்பெயினின் கேனரி தீவுகள் பல நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கும் அடைக்கலம் தரும் முகாமாக விளங்குகிறது.
ஆனால், இந்த முகாம்களின் நிலைமை உலகம் முழுவதும் இருந்து உரிமைகள் செயற்பாட்டாளர்களால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.