

காந்தகார் மற்றும் ஹிராத் நகரங்களில் உள்ள இந்திய தூதரங்கள் சூறையாடிய தலிபான்கள், உள்ளே புகுந்து ஆவணங்களை தேடியதுடன் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை எடுத்துச் சென்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்னர். அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
காபூலில் சிக்கியிருந்த இந்திய அதிகாரிகள், தூதரக ஊழியர்கள் உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு இந்தியா திரும்பினர். காபூலில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அதுபோலவே ஆப்கனில் உள்ள காந்தகார், ஹிராத் உள்ளிட்ட நகரங்களில் அமைந்திருந்த துணை தூதரகங்கள் கடந்த மாதமே மூடப்பட்டன. ஆப்கனின் 2-வதுபெரிய நகரான காந்தகார் கடந்த9-ம் தேதி தலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இதனால் அங்குள்ள இந்திய துணைத் தூதரகம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. தூதரகம் மூடபட்டு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதுபோலவே ஹிராத்தில் உள்ள தூதரகமும் மூடப்பட்டு ஊழியர்கள் இந்திா அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் காந்தகார் மற்றும் ஹிராத் நகரங்களில் உள்ள இந்திய தூதரங்கள் மூடப்பட்ட நிலையில் தூதரக கட்டிடத்தை தலிபான்கள் சூறையாடியுள்ளனர். உள்ளே புகுந்து ஆவணங்களை தேடியுள்ளனர். பின்னர் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை எடுத்துச் சென்றனர்.
முன்னதாக காபூலில் உள்ள இந்திய தூதரகத்தை மூட வேண்டாம் எனவும், ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் சில தினங்களுக்கு முன்பு தலிபான்கள் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் இந்த சூறையாடல் நடந்துள்ளது.