

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு, தொடர்ந்து தாக்கிய புயல், அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைக்காத உதவிகள் என உறைந்து நிற்கும் ஹைதி மக்கள் பதற்றத்தில் மருத்துவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.
கரீபியன் கடலில் இருக்கும் சிறிய தீவு ஹைதி. கியூபா, ஜமைக்காவுக்கு கிழக்கேயும், பஹாமா நாட்டுக்கு தெற்கேயும், டோமினிக் குடியரசுடன் எல்லைகளைப் பகிர்ந்தும் அமைந்துள்ளது.
ஹைதியின் தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸ் நகரிலிருந்து மேற்கே 125 கி.மீ தொலைவில் மையமாகக் கொண்டு் கடந்த சனிக்கிழமை திடீரென 7.2 புள்ளி ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தால், ஏராளமான கட்டிடகள்,வீடுகள், வணிக வளாகங்கள் இடிந்து தரைமட்டமாகின.
ஹெய்தி நாட்டின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர், 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. அந்த அதிர்வலையில் இருந்து அந்நாட்டு மக்கள் மீள்வதற்குள்ளாகவே, அங்கே புயல் வீசியது. கிரேஸ் என்ற பெயரிடப்பட்ட அந்தப் புயல் கருணையே இல்லாமல் மக்களை மேலும் துன்பத்துக்கு ஆளாக்கிச் சென்றுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவிலிருந்தும் இன்னும் பல நாடுகளில் இருந்தும் தனிப்பட்ட முறையில் உதவிகள் வந்து சேர்ந்துள்ளன. ஆனால், அங்கு தேவையோ கணக்கிடப்பட முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது.
தலைநகர் போர்ட் ஆஃப் பிரின்ஸில் உள்ள மிக்கப்பெரிய மருத்துவமனைக்குத் தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால், தங்கள் பகுதிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லை என வெகுண்டெழுந்த சில மக்கள் அந்த மருத்துவமனையிலிருந்து 2 மருத்துவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். அதனால், அந்த மருத்துவமனை இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுவிட்டது.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள் இல்லாமல் இருக்கின்றனர். 30,000 குடும்பங்கள் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளன. பள்ளிகள், தேவாலயங்கள், மருத்துவமனைகள் என மக்களைத் தங்கவைக்கக் கூடிய இடங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இப்படியான சூழலில் யாருக்கு எங்கே சென்று உதவிகளை வழங்குவது என்பதுகூட சிக்கலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் மீட்புக் குழுவினர். மீட்புக் குழுவினரை பாதியிலேயே சில குழுக்கள் வழிமறித்து பொருட்களை எடுத்துச் செல்லும் அவல நிலையும் அங்கு நிலவுகிறது. அதனால், சர்வதேச உதவிகளை ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்லும்போது ஆயுதமேந்திய காவலர்கள் செல்கின்றனர்.
பிரதமர் வாக்குறுதி:
இந்நிலையில், ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்ரி கூறுகையில், இதற்கு முன்னர் நாடு பல இயற்கைப் பேரிடர்களை சந்தித்துள்ளது. அப்போதும் சர்வதேச உதவியை மக்களுக்குப் பிரித்து வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அத்தகைய வரலாற்றுப் பிழை இந்தமுறை நடைபெறவிடமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.