

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைபற்றிய நிலையில் அங்கு சிக்கியுள்ள அமெரிக்கர்களை மீட்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஒரே நாளில் 11 விமானங்கள் மூலம் 3 ஆயிரம் பேர் காபூல் விமான நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர். பல நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளும் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்டு வர ஒவ்வொரு நாடும் விமானத்தை அனுப்பி வருகிறது. அமெரிக்காவும் அங்கு பணியாற்றிய தங்கள் நாட்டைச் சேர்ந்த ஊழியர்கள், வீரர்கள், அவர்கள் குடும்பத்தினர் என பலரையும் தொடர்ந்து அழைத்து வருகிறது.
இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை கூறியுள்ளதாவது:
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைபற்றிய பிறகு தொடர்ந்து அமெரிக்க மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆகஸ்ட் தொடக்கத்தில் இருந்து இதுவரை 14 ஆயிரம் பேர் அமெரிக்கா திரும்பியுள்ளனர்.
ஆகஸ்ட் 14-ம் தேதியில் இருந்து 9ஆயிரம் பேர் காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா அழைத்து வரப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 11 விமானப்படை விமானங்கள் காபூலில் இருந்து இயக்கப்பட்டுள்ளன. காபூலில் இருந்த அமெரிக்கர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.