

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் வந்துள்ளதையடுத்து, காபூல் நகரிலிருந்து தப்பித்து உயிர்பிழைக்க அமெரிக்க விமானப்படை விமானத்தில் ஏறி தப்பித்தவர்களில் சிலர் விமானம் பறக்கும் போது கீழே விழுந்து இறந்தனர். அதில் ஒருவர் ஆப்கானிஸ்தான் தேசிய கால்பந்து அணியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்தத் தகவலை ஆப்கானின் ஏஐஎஸ்எஸ் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் தாவூத் மொராடியன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்தார்.
ஆப்கானிலிருந்து அமெரி்க்க, நேட்டோ படைகள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து ஆப்கானை கைப்பற்றும் முயற்சியில் இறங்கிய தலிபான்கள் பல்வேறு மாகாணங்களைக் கைப்பற்றி தலைநகர் காபூலையம் கைப்பற்றினார். இதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது, தலிபான்கள் காபூல் நகருக்குள் வந்ததை அறிந்த அதிபர் அஷ்ரப் கனி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பினார்.
தலிபான்கள் ஆட்சியில் வாழ்வது கடினம் என்று உணர்ந்த மக்கள் காபூல் விமானநநிலையத்திலிருந்து புறப்படும் பல்வேறு விமானங்கள் மூலம் வேறு நாடுகளுக்கு தப்பிக்க முயன்று வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக காபூல் விமானநிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பிக்கிடக்கிறது.
இதில் கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க விமானப்படையின் சி-17 குளோப் மாஸ்டர் என்ற விமானம் காபூல் நகருக்கு வந்தது. அங்கிருந்த அமெரிக்க ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்பட்டபோது, விமானத்தின் லேண்டிங் டயர் பகுதி, பக்கவாட்டில் சிலர் ஏறி தொற்றிக் கொண்டனர்.
விமானம் காபூல் விமானநிலைய ஓடுபாதையில் விமானம் சென்றபோது ஏராளமான மக்கள் விமானத்தை துரத்தும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானது. விமானம் பறக்கத் தொடங்கியவுடன், விமானத்தின் லேண்டிங் பகுதி, பக்கவாட்டில் தொங்கிய 7 பேர் வானிலிருந்து கீழே விழுந்து உடல் சிதறி உயிரிழந்தனர்.
இதில் உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆப்கான் தேசிய கால்பந்து அணியைச் சேர்ந்த ஜாகி அன்வாரி என்பது தெரியவந்துள்ளது. 19 வயதாகும் ஜாகி அன்வாரி உயிரிழந்ததை ஆப்கானிஸ்தான் உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை நேற்று உறுதி செய்தது.
தன்னுடைய 16 வயதிலிருந்தே ஆப்கானி்ஸ்தான் ஜூனியர் கால்பந்து அணியில் விளையாடி தற்போது தேசிய அணியில் அன்வாரி இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்வாரி உயிரிழந்த சம்பவத்தைக் கேட்டு ஆப்கன் மக்கள் சோகத்தில் உள்ளனர், அவரின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஆப்கானின் ஏஐஎஸ்எஸ் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் தாவூத் மொராடியன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
காபூல் நகரை தலிபான்கள் கைப்பற்றியவுடன் தாவூத் மொராடியின் அந்நாட்டிலிருந்து வெளிேயறினார். காணொலி மூலம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நேற்று அவர் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “ கடந்த சில நாட்களுக்கு முன் காபூல் விமானநிலையத்தில் அமெரிக்க விமானத்திலிருந்து கீழே விழுந்து இறந்த 7 பேரில் ஆப்கானிஸ்தான்கால்பந்து அணி வீரர்.
தீவிரவாதிகளின் செயலால் ஆப்கானிஸ்தானுக்கு மட்டுமல்ல உலகிற்கே அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. தலிபான்கள் அடக்குமுறைக்கு அஞ்சி நாள்தோறும் மக்கள் கூட்டம்கூட்டமாக அந்நாட்டை விட்டு வெளியேற காபூல் விமாநிலையத்தில் காத்திருக்கிறார்கள். மனவிரக்தி, உதவிசெய்ய ஆள்இல்லாமல், அச்சத்துடன் மக்கள் காத்திருப்பதைக் காண முடிகிறது.
இவர்கள் மட்டுமல்ல லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து வெளியேற முடியாமல் அச்சத்துடன் இருக்கிறார்கள். விவசாயிகள் முதல் பெண் ஆர்வலர்கள் வரை மோசமான நிலையில் இருக்கிறார்கள். மிகப்பெரிய மனிதப் பேரழிநடக்கும் முன்உலக நாடுகள் தலையிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.