

தலிபான்களின் செயல்களுக்கு உலக நாடுகள் சாட்சியாக இருக்கப் போகின்றன என்று ஆப்கானிஸ்தான் விமானப் படையின் முதல் பெண் விமானி நிலோபர் ரஹ்மானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தி நிறுவனத்திடம் நிலோபர் ரஹ்மானி ஃபாக்ஸ் கூறும்போது, “இனி வரும் காலங்களில் தலிபான்களின் செயல்களுக்கு சாட்சியாக இந்த உலக நாடுகள் இருக்கப் போகின்றன. காபூல் மைதானத்தில் மீண்டும் பெண்கள் மீது அவர்கள் கல்லைக் கொண்டு அடிப்பார்கள். துரதிருஷ்டவசமாக எனது குடும்பம் ஆப்கானிஸ்தானில் சிக்கிக் கொண்டுள்ளது. அவர்கள் ஆபத்தில் உள்ளனர். எனது கனவுக்குத் துணையாக நின்றதற்காக அவர்கள் தாக்கப்படலாம்.
ஆப்கனில் நடப்பதைக் கேட்கும்போது என்னால் உறங்க முடியவில்லை. எனக்கு பயமாக உள்ளது. எனக்கு 2013ஆம் ஆண்டு முதலே தலிபான்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்” என்றார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த காலங்களைப் போல் இல்லாமல் இஸ்லாம் விதிமுறைகள்படி, அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கு வழங்குவோம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.