

தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அனைத்து நாடுகளுடனும் சிறந்த ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை விரும்புகிறது என்று அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் சபிஹூல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சபிஹூல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆப்கானிஸ்தான் அனைத்து நாடுகளுடனும் சிறந்த ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை விரும்புகிறது. ஆனால், நாங்கள் எந்த நாட்டுடனும் வியாபாரம் செய்வது பற்றி இதுவரை பேசவில்லை. இது தொடர்பாக வந்த செய்திகளில் உண்மை இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில், தலிபான்கள் அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவரான முல்லா அப்துல் கனி பரதார் ஆப்கனின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.