

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பும், அவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவதும்தான் மத்திய அரசின் நோக்கம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அதேநேரம் ஆப்கானிஸ்தானில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக அரசு கவனித்துவருகிறது என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிபின், அங்கிருக்கும் பெரும்பாலான மாகாணங்களை தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தலைநகர் காபூலில் தலிபான்கள் நுழைந்ததை அறிந்த அதிபர் அஷ்ரப் கனி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பி ஓடிவிட்டார். காபூலில் அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய தலிபான்கள் ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்புடன் வெளியேற்ற ஒவ்வொரு நாடும் முயன்று வருகிறது.அங்கு நடக்கும் அரசியல் நிகழ்வுகளையும் உன்னிப்பாக உலக நாடுகள் கவனித்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நடந்தது. ஆகஸ்ட் மாதத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியாதான் தலைமை ஏற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அதன்பின் நிருபர்களுக்கு ஜெய்சங்கர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் உள்ள அரசியல் நகர்வுகளையும், சூழலையும் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பும், இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்துவருவதையும் முக்கிய நோக்கமாக வைத்துள்ளோம்
ஆப்கனில் இப்போது இருக்கும் சூழல் குறித்து அரசியல்ரீதியாக எந்த கருத்தும் தெரிவிக்க இயலாது. அங்கிருக்கும் சூழலை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. தலிபான் பிரதிநிதிகள், தலிபான்கள் காபூல் வந்துள்ளனர், பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஆப்கானிஸ்தானுடன் வரலாற்று ரீதியான உறவு இந்தியாவுக்கு இருப்பதால், அந்த உறவு மக்களுடன் தொடர்ந்து இருக்கும். அடுத்துவரும் நாட்களில் எங்கள் அணுகுமுறைக்கு அந்த உறவு உதவும். இந்த நேரத்தைப் பொறுத்தவரை ஆப்கனில் சிக்கியிருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மட்டும்தான் நோக்கமாக இருக்கிறது.
ஆப்கனில் உள்ள சூழல் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர், அமெரிக்க வெளியுறவுத்துறை, உள்ளிட்ட பலருடன் பேசினேன். இந்த நேரத்தில் ஒவ்வொருவரையும் போல, ஆப்கனில் உள்ள சூழல் குறித்து மிகவும் கவனித்து வருகிறோம். எங்களின் நோக்கம் ஆப்கனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பும், அவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவதாகும்.
இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.