Published : 19 Aug 2021 09:56 AM
Last Updated : 19 Aug 2021 09:56 AM

ஆப்கனில் ஷரியத் சட்டம் மட்டுமே அமல்: தலிபான்கள் திட்டவட்டம்

தலிபான் தீவிரவாத அமைப்பின் நிர்வாகிகள் ஒருவரான வஹீதுல்லாஹ் ஹஷிமி : படம் உதவி ட்விட்டர்

காபூல்

ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சி கிடையாது. ஷரியத் சட்டத்தின்படிதான் ஆட்சி நடக்கும் என்று தலிபான் தீவிரவாத குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிபின், அங்கிருக்கும் பெரும்பாலான மாகாணங்களை தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தலைநகர் காபூலில் தலிபான்கள் நுழைந்ததை அறிந்த அதிபர் அஷ்ரப் கனி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பி ஓடிவிட்டார்.

காபூலில் அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய தலிபான்கள் ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்துள்ளனர். கடந்த காலத்தில் தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன, கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால், ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் இந்தமுறை உலகிற்குத் தங்களை நவீன சிந்தனையுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ள விரும்புவதாகவும், முஸ்லிம் சட்டங்களுக்கு உட்பட்டு பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும், சுகாதாரத்துறையில் பெண்கள் பணியாற்றலாம், கல்வி கற்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தலிபான்கள் ஆட்சிஅமைத்தால் யார் அதிபராக வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரி்த்து வருகிறது. ஆனால் தலிபான்களைப் பொறுத்தவரை உடனடியாக அதிபர் யாரும் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள், முதலில் தலிபான் நிர்வாகக் குழு சேர்ந்து ஆப்கானிஸ்தானை நிர்வகிக்கும் என்று கூறப்படுகிறது.

தலிபான்களில் மிக மூத்த தலைவரான ஹெய்பத்துல்லா அகுன்ஜதா நிர்வாகக்குழுவின் தலைவராக பொறுப்பேற்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே தலிபான் தீவிரவாத அமைப்பின் நிர்வாகிகள் ஒருவரான வஹீதுல்லாஹ் ஹஷிமி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“ ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ரீதியான ஆட்சிக்கு இடமில்லை. என்னவிதமான அரசியல்முறையை ஆப்கானிஸ்தானில் செயல்படுத்தலாம் என்றெல்லாம் நாங்கள் ஆலோசிக்கமாட்டோம். ஏனென்றால் எங்களுக்கு ஷரியத் சட்டம் இருக்கிறது. அதன்படி ஆட்சி நடக்கும்.

இங்கு ஜனநாயக முறைக்கு எந்த வழியும் இல்லை, ஏனென்றால் ஜனநாயக முறைக்கான எந்த அடிப்படைக் கட்டமைப்பும் இங்கு இல்லை. தலிபான் தலைவர்களுடான கூட்டம் இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது, அப்போது நாட்டை நிர்வாகம் செய்வது குறித்த முடிவுகள் எடுக்கப்படும்.

கடந்த முறை அதாவது 1996-2001ம் ஆண்டுவரை தலைவர் முல்லா ஓமர் தலைமையில் எவ்வாறு ஆட்சி நடந்ததோ அதேபோன்றுதான் இந்தமுறையும் ஆட்சி அமையலாம். மூத்த தலைவரான ஹெய்பத்துல்லா அகுன்ஜதா நிர்வாகக் குழுவின் தலைவராக இருப்பார்,

அதாவது அதிபராக செயல்படலாம். அவரின் துணை அதிபரின் பணியைத் தொடரலாம். முல்லா ஓமரின் மகன் மவுலவி யாகூப், ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவர் சிராஜூதீன் ஹக்கானி, அரசியல் குழுத் தலைவர் அப்துல் கனி பராதர் ஆகியோர் ஹெய்பத்துல்லா அகுன்ஜதாவுக்கு துணையாகச் செயல்படுவார்கள்.

மூத்த தலைவர் ஹெய்பத்துல்லா அகுன்ஜதா

தலிபான்களிடம் விமானம், ஹெலிகாப்டர்இருக்கிறது இதை இயக்க விமானிகளும், பைலட்களும் இல்லை. ஆதலால் ஆப்கன் படையிலிருந்து வீரர்களையும், முன்னாள் விமானிகளையும் எங்கள் அமைப்பில் சேர்க்கஇருக்கிறோம். பெரும்பாலும் ஆப்கான் அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை வேலைக்கு அமர்த்த இருக்கிறோம்.

எங்களின் சொந்தப்படை வீரர்கள், அரசின் படை வீரர்களை இணைத்து புதிய ராணுவத்தை அமைக்க இருக்கிறோம். இவர்கள் பெரும்பாலும் துருக்கி, ஜெர்மனி, இங்கிலாந்தில் பயிற்சி எடுத்தவர்கள். ஆதலால் அவர்களிடம் பேசி மீண்டும் பணிக்கு வரக் கூறுவோம். ராணுவத்தில் சில மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செய்ய இருக்கிறோம். வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
இவ்வாறு வஹீதுல்லாஹ் ஹஷிமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x