

தலிபான்களுக்கு எதிராக இன்று ஜலாலாபாத்தில் மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் வரை பலியானதாகத் தெரிகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
ஆப்கனில் புதிய அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தலிபான்கள் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜலாலாபாத் நகரில் தலிபான்கள் கொடியை அப்புறப்படுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஊர்வலமாகவும் சென்றனர். அப்போது திடீரென கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர். தலிபான்கள் பத்திரிகையாளர்களைத் தாக்கியதாவும் கூறப்படுகிறது.
ஆப்கன் செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்ட வீடியோவில் மக்கள் ஆப்கன் தேசியக் கொடியுடன் ஊர்வலமாக வர திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெறுவதும் மக்கள் கலைந்து ஓடுவதும் பதிவாகியுள்ளது.