

காபூலிலிருந்து செய்தியை வழங்கிய சிஎன்என் பத்திரிகையாளர் கிளாரிசா வார்டு புர்கா அணிந்திருந்தது விமர்சனத்துக்குள்ளாகியது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
ஆப்கானில் இனி சண்டை நடக்காது, அமைதி நிலவும் என்று தலிபான்கள் உறுதியளித்துள்ளனர். இதற்கிடையில் அமெரிக்காவை மையமாக வைத்து இயங்கும் சிஎன்என் பத்திரிகையாளர் புர்கா அணிந்து காபூலிருந்து செய்தி வழங்கியது சர்ச்சையாகியது.
சமூக வலைதளத்தில் பலரும் தலிபான் ஆக்கிரமிப்புக்கு முன் ( கிளாரிசா புர்கா அணியாமல் இருக்கும் புகைப்படம்), தலிபான் ஆக்கிரமிப்புக்கு பின் (கிளாரிசா புர்கா அணிந்த புகைப்படம்) என்று மீம் ஒன்றை பகிர்ந்து வந்தனர்.
இதற்கு தற்போது கிளாரிசா வார்டு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, “ இந்த மீம் தவறானது. முதலில் உள்ள புகைப்படம் தனியார் பகுதியில் எடுக்கப்பட்டது. கீழ் உள்ள புகைப்படம் காபூலில் தலிபான்கள் கட்டுப்பாட்டு பகுதியில் எடுக்கப்பட்டது. நான் இதற்கு முன்னரும் காபூலில் எனது தலையில் துணி அணிந்திருக்கிறேன்” என்றார்.
எனினும் இணையத்தில் பலரும் தலிபான்களின் அடிமைத்தனம் ஆட்சிக்கு இப்புகைப்படம் ஒர் உதாரணம் என்று பகிர்ந்து வருகின்றனர்.
ஆப்கன் பெண்கள் கல்வி கற்கலாம், வேலைக்கு செல்லலாம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.