

சவூதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய 2,100 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 1,800 செவிலியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
சவூதி அரேபியாவில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய சிறப்புத் திறன் பெற்ற செவிலியர்கள் போதிய அளவில் இல்லை. எனவே, அந்நாட்டு அரசின் சுகாதாரத்துறை சார்பில் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் ஒரு மாதத்தில் அலுவலக ரீதியிலான நடைமுறைகள் முடிவடைந்ததும் அவர்கள் அனைவரும் சவூதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவார்கள். ஓராண்டு புதுப்பிக்கத்தக்க ஒப்பந்த முறைப்படி பணியாற்றவுள்ள அவர்கள் அனைவரும், இளநிலை மற்றும் முதுநிலை செவிலியர் படிப்புகளை முடித்தவர்களாவர்.
சுகாதார அமைச்சகத்தின் செவிலியர் பிரிவு இயக்குநர் இல்ஹம் சிந்தி கூறுகையில், “மருத்துவமனைகளில் பணிபுரிய கூடுதலாக செவிலியர்கள் தேவைப்படும் பட்சத்தில், இந்த இரு நாடுகளில் இருந்தும் தொடர்ந்து செவிலியர்களை பணிக்குத் தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளோம். சிறப்புத்திறன் பெற்ற செவிலியர்கள் சவூதி அரேபியாவிலேயே அதிக அளவில் உருவாகும்பட்சத்தில், வெளிநாடுகளிலிருந்து செவிலியர்களை தேர்ந்தெடுக்கும் பணி நிறுத்தப்படும்” என்றார்.
சுகாதாரத் துறை அமைச்சகம் 2009-ம் ஆண்டில் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி அந்நாட்டில் பணியாற்றும் 1,10,858 செவிலியர்களில் 32.3 சதவீதத்தினர் மட்டுமே சவூதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.