புதுமணத் தம்பதிகள் கவுரவக் கொலை: பாகிஸ்தானில் வெறிச்செயல்
பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனை கைப்பிடித்தார் என்ற காரணத்திற்காக, பாகிஸ்தானில் புதுமணத் தம்பதிகள் தலை வெட்டப்பட்டு கவுரக் கொலை செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் சத்ரா கிராமத்தைச் சேர்ந்த முவாபியா பிபி (23), ஹசானாபாத் எனும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சஜ்ஜத் அகமது (27) என்பவரைக் காதலித்தார். தங்கள் காதலைப் பற்றி முவாபியா பிபியின் பெற்றோரிடம் கூறி திருமணத்திற்குச் சம்மதம் கேட்டார் சஜ்ஜத். ஆனால் முவாபியாவின் பெற்றோர் அதை நிராகரித்தனர்.
இதனால் அவர்கள் இருவரும் ஜூன் 18-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் புரிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, முவாபியாவின் உறவினர் ஒருவர் அவர்களின் திருமணத்தை பெண்ணின் பெற்றோர் ஏற்றுக்கொண்டதாகவும், ஆகவே அவர்களை ஊருக்குத் திரும்பி வருமாறும் கூறினார்.
இதை நம்பிய அந்தத் தம்பதிகள் வெள்ளிக்கிழமை ஹசானாபாத் வந்தனர். அவர்கள் வந்திருப்பதை அறிந்த பெண்ணின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் 7 பேர் சஜ்ஜத்தின் வீட்டுக்குச் சென்று அவர்களைத் தாக்கினர். பிறகு, அவர்களைத் தெருவுக்கு இழுத்து வந்தனர். அவர்களை மிகவும் கொடூரமாக துன்புறுத்திய பின், கை கால்களைக் கட்டிப் போட்டனர். ஊர்ப் பொதுமக்கள் முன்னிலையில், புதுமணத் தம்பதியரின் தலையை வெட்டினர். இந்தக் கொடூரச் செயலைத் தடுக்க அங்கிருந்த மக்கள் யாரும் முன்வரவில்லை.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை.
