ஒரே ஒரு கரோனா நோயாளி; ஒட்டுமொத்த தேசத்துக்கும் 3 நாள் முழுஊரடங்கு விதித்த நியூஸிலாந்து

ஒரே ஒரு கரோனா நோயாளி; ஒட்டுமொத்த தேசத்துக்கும் 3 நாள் முழுஊரடங்கு விதித்த நியூஸிலாந்து
Updated on
1 min read

ஒரே ஒரு கரோனா நோயாளி கண்டறியப்பட்டதால் ஒட்டுமொத்த தேசத்துக்கு 3 நாள் முழுஊரடங்கு விதித்த நியூஸிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நியூஸிலாந்து நாட்டின் கடைசி கரோனா நோயாளி குணமடைந்தார். நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு வாழ்த்துகள் குவிந்தது.

நியூஸிலாந்து ஒரு தீவு நாடு. அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 50 லட்சம். பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மேற்கொண்ட நடவடிக்கைகளால் அங்கு கடந்த ஆறு மாதங்களாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் அந்நாட்டின் ஆக்லாந்து நகரில் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், பிரதமர் ஆர்டெர்ன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது இன்று தொடங்கி மூன்று தினங்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அறிவித்துள்ளார். அதேபோல், பாதிக்கப்பட்ட நபர் கோரமண்டல் எனும் பகுதிக்குச் சென்றுவந்ததால் அந்தப் பகுதியிலும் அவர் வசிக்கும் ஆக்லாந்திலும் 7 நாட்கள் முழு ஊரடங்கில் இருக்கும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் இந்த முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் சூப்பர் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் கரோனா வைரஸ் கடைசி பாதிப்பு நியூஸிலாந்தில் அறியப்பட்டது. ஆனால், இப்போது டெல்டா வைரஸால் பாதிப்பு ஏற்படலாம் என்று அந்நாட்டு சுகாதார நிபுணர்கள் அச்சத்தில் உள்ளனர். இருப்பினும் ஜீனோம் பரிசோதனை முடிவுகள் வெளிவந்தால் தான் பாதிக்கப்பட்டுள்ள ஒரே ஒரு நோயாளியும் டெல்டா வேரியன்ட்டால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது உறுதியாகும் என்றும் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நியூஸிலாந்து கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் வேகம் காட்டாத நிலையில் அந்நாட்டு அரசு டெல்டா வைரஸால் அச்சமடைந்துள்ளது.

நியூஸிலாந்தில் இதுவரை 32 சதவீத மக்கள் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 18 சதவீத மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அண்டை நாடான அதுவும் குறிப்பாக நியூஸியை எல்லையை ஒட்டிய சிட்னியில் டெல்டா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் நியூஸிலாந்து மீண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

தடுப்பூசித் திட்டத்தையும் துரிதப்படுத்தியிருக்கிறது. ஊரடங்கு அமலுக்கு வருவதால் அந்த நாட்களில் மட்டும் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in