

காபூலில் உள்ள அமெரிக்கர்களை ஏற்றிச் செல்வதற்காக அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்று தயாராக இருந்தது. காலியாக இருந்த அந்த விமானத்தில் ஏராளமான ஆப்கானிஸ்தானியர்கள் ஏறி பதுங்கிக் கொண்டனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர். பல நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளும் சிக்கி்க் கொண்டனர். அவர்களை மீட்டு வர ஒவ்வொரு நாடும் விமானத்தை அனுப்பி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் வசிக்கும் வெளிநாட்டினர் காபூல் விமான நிலையத்தில் திரண்டு வருகின்றனர். தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் பீதியடைந்துள்ள உள்நாட்டு மக்களும் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்வதற்காக காபூல் விமான நிலையம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
மக்கள் கூட்டம் கூட்டமாக விமான நிலையத்துக்குள் நுழைந்ததால் விமான நிலையம் முடங்கியது. இந்தநிலையில் காபூலில் உள்ள அமெரிக்கர்களை ஏற்றிச் செல்வதற்காக அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்று தயாராக இருந்தது. காலியாக இருந்த அந்த விமானத்தில் ஏராளமான ஆப்கானிஸ்தானியர்கள் ஏறி பதுங்கிக் கொண்டனர். அதில் குழந்தைகள், வயதானவர்கள் இருந்தனர்.
இந்த விமானம் குறைந்த ஆட்களை ஏற்றி செல்லும் திறன் கொண்டது. அதிகமமான பேரை ஏற்றிச் செல்ல விரும்பவில்லை. அவர்களை இறங்குமாறு அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் கூறினர். ஆனால் அவர்கள் இறங்க மறுத்தனர். பின்னர் அவர்கள் நிலைமையை எடுத்துச் சொல்லி கீழே இறக்கி விட்டனர். பிறகு அமெரிக்கர்களை ஏற்றிக் கொண்டு அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.