

ஆப்கனில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் தொங்கியபடி பயணம் செய்த இரண்டு பேர் விமானம் உயரே பறந்தபோது தவறிவிழுந்து பரிதாபமாக இறந்தனர்.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் நகரையும் தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார். அதிபர் மாளிகையைக் கையகப்படுத்திய தலிபான்கள் அங்கு குழுமியுள்ளனர்.
ஆப்கனில் அசாதாரண சூழல் நிலவுவதால், காபூல் நகரில் உள்ள ஹமீது கர்சாய் விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் விமானத்தில் செல்ல மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தலிபான்களிடம் சிக்கிச் சாவதைவிட, வேறு ஏதாவது நாட்டுக்குத் தப்பிவிடலாம் என மக்கள் வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் தொங்கியபடி சிலர் பயணிக்க முற்பட்டனர். விமானம் உயரே பறந்த சில நிமிடங்களிலேயே விமானத்திலிருந்து இருவர் கீழே விழும் காட்சிகள் அடங்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
இது குறித்து டோலோ நியூஸின் செய்தியாளர் தாரிக் மஜிதி தனது ட்விட்டர் பக்கத்தில், "காபூலைச் சேர்ந்த மூவர் அமெரிக்க விமானத்தைத் தொற்றிக் கொண்டு புறப்பட்ட சிலர் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தனர். ஆப்கனில் நிலவும் மோசமான சூழல் காரணமாகவே அவர்கள் உயிரிழக்க நேர்ந்துள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இதேபோல், விமானத்தில் காபூல்வாசிகள் தொற்றிக் கொள்ளும் காட்சியும் வெளியாகி மனதை பதற வைக்கிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களுக்கு உலக நாடுகள் தஞ்சம் கொடுக்க வேண்டும் என்று ஐ.நா. சபை கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆப்கன் மக்களை நாம் கைவிட்டுவிடக் கூடாது. புறக்கணிக்கவும் கூடாது. அடுத்த வரும் சில நாட்கள் மிக முக்கியமானது என ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.