Published : 16 Aug 2021 06:51 PM
Last Updated : 16 Aug 2021 06:51 PM

கரோனாவை விரட்ட மாய, மந்திரம்: சுகாதார அமைச்சரை நீக்கினார் இலங்கை அதிபர்

கரோனாவை விரட்ட மாய, மந்திரம் என நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வானியராச்சியை நீக்கியுள்ளார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே.

சுகாதார அமைச்சர் பவித்ரா வானியராச்சி வகித்துவந்த பொறுப்பு ஊடகத் துறை அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சராக இருந்த பவித்ராவுக்கு கடந்த ஜனவரி மாதம் கரோனா தொற்று ஏற்பட்டது. அபோது அவர் கரோனாவுக்கு எதிராக மந்திரிக்கப்பட்ட மருந்தை உட்கொண்டதாக பகிரங்கமாக தெரிவித்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தபோது தான் அருந்திய மந்திர மருந்து தன்னைக் காப்பாற்றியதாக அவர் பின்னர் கூறினார். அதேபோல் கடந்த நவம்பர் மாதம், சாமியார் ஒருவரின் வழிகாட்டுதலின்படி நதியில் புனித நீர் குடுவையைக் கரைத்தார். இதனால், இலங்கையில் கரோனா பெருந்தொற்று ஒழியும் என சாமியார் கூறியதால் அவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.

இந்நிலையில், சுகாதார அமைச்சர் மீது எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தன. அதேபோல், சுகாதார அமைச்சரின் கவனக்குறைவால் நாட்டில் கரோனா வேகமாகப் பரவி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், அவரை சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார் அதிபர். இருப்பினும் அவருக்கு போக்குவரத்து அமைச்சகப் பணி வழங்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x