Published : 16 Aug 2021 04:48 PM
Last Updated : 16 Aug 2021 04:48 PM

பெண் கல்வி அனுமதிக்கப்படுமா?- தலிபான் செய்தித் தொடர்பாளர் பதில் 

ஆப்கான் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படுவார்கள். ஆப்கான் மக்களை பழிவாங்கமாட்டோம் என்று தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சுகைல் ஷாகின் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர்.

தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் ஆப்கானிஸ்தான் கொண்டு வரப்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில் தலிபான்களின் அடுத்த நடவடிக்கை குறித்து அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுகைல் ஷாகின்ப் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு பதிலளித்திருக்கிறார்.

இதுகுறித்து சுகைல் ஷாகின் கூறும்போது, “ மக்களின் உயிரும், சொத்துகளும் பாதுகாப்பாக இருக்கும். ஆப்கானிஸ்தான் மக்களை பழிவாங்க மாட்டோம். நாங்கள் மக்களின் சேவகர்கள். எங்களது தலைமை காபூலில் தொந்தரவுகள் ஏற்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

நாங்கள் அமைதியான முறையில் எங்கள் அதிகாரத்தைப் பெற காத்துக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் அனைத்து ஆப்கான் மக்களும் பங்குகொள்ளும் ஆட்சியாக எங்கள் ஆட்சி அமையும். நாங்கள் இஸ்லாமிய அரசு அமைய விரும்புகிறோம். நாங்கள் பெண்கள் உரிமையை மதிப்போம். வெளியே தனியாக பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் ஹிஜாப் அணியும் பழக்கத்தை கடைப்பிடிப்பார்கள் . ” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x