பைடன் எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார்: வெள்ளை மாளிகை முன் ஆப்கன் மக்கள் போராட்டம்

பைடன் எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார்: வெள்ளை மாளிகை முன் ஆப்கன் மக்கள் போராட்டம்
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துரோகம் இழைத்துவிட்டார் என ஆப்கன் மக்கள் வெள்ளை மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர்.

தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் ஆப்கானிஸ்தான் கொண்டு வரப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து வெளிநாடுகளுக்குத் தப்பித்துச் செல்கின்றனர். ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் கூடிய ஆப்கன்வாசிகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.

”பைடன் எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார். அவர்தான் இதற்குக் காரணம். தலிபான்கள் மீண்டும் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளார்கள். ஆப்கானியர்கள் மீண்டும் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு அமைதி வேண்டும்” என்ற முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் பங்கேற்ற ஃபர்சானா ஹபிஸ் கூறும்போது, “தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு சுதந்திரம் கிடையாது. புர்கா அணியும் காலத்திற்கு நாங்கள் செல்ல விரும்பவில்லை. அது சுதந்திரம் கிடையாது. எனது குடும்பம் அங்கு உள்ளது. என்னால் உறங்க முடியவில்லை. இது எனது மக்களுக்கு ஏற்பட்ட ஆபத்து” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in