Published : 16 Aug 2021 14:53 pm

Updated : 16 Aug 2021 14:53 pm

 

Published : 16 Aug 2021 02:53 PM
Last Updated : 16 Aug 2021 02:53 PM

காபூல் விமானநிலையத்தில் பதற்றம்: தலிபான்கள் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

chaos-at-kabul-airport-as-taliban-retakes-afghanistan

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமானநிலையத்தில் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல குவிந்த நிலையில், அங்கு சற்றுமுன் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதில் பொதுமக்களில் குறைந்தது 5 பேராவது பலியாகியிருக்கலாம் என அல்ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலிபான்களின் வெற்றிப் பேரணி:


ஆப்கானிஸ்தானில் போர் முடிந்துவிட்டது என்று தலிபான்கள் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தாலும் கூட அங்கு நடக்கும் நிகழ்வுகள் வன்முறைக் களமாக ஆப்கானிஸ்தான் தகித்துக் கொண்டிருப்பதையே உணர்த்துகின்றன. முன்னதாக, நேற்று தலிபான்கள் காபூலைக் கைப்பற்றினர். அதிபர் அஷ்ரப் கானி ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிச் சென்றார். அவர் தஜிகிஸ்தான் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதிபர் மாளிகைக்குள்ளேயே தலிபான்கள் சென்றுவிட்டனர். அதிகாரப்பூர்வமாக ஆப்கானிஸ்தான் வீழ்ந்தது உறுதியானது.

இந்நிலையில், காபூல் விமானநிலையத்தில் மக்கள் குவிந்தனர். இன்று காலை தொடங்கி காபூல் வீதிகளில் தலிபான்கள் வெற்றி அணிவகுப்பை நடத்தி வருகின்றனர். தலிபான்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடும் என்பதால் எப்படியாவது பாகிஸ்தான், சீனா என ஏதாவது அண்டை நாடுகளுக்கு தப்பிச் செல்லும் முயற்சியில் அந்நாட்டு மக்கள் இறங்கியுள்ளனர்.

டவுன் பஸ் ஃபுட்போர்டு போல் தொங்கிய மக்கள்:

ஆப்கன் விமான நிலையத்தில் கடல் அலைபோல் திரண்ட மக்கள் வெள்ளம் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களின் பரிதாப நிலைக்கு வேறு சாட்சி தேவையில்லை என்பதுபோல் இருந்தது. பேருந்து வசதி இல்லாத ஏதோ ஒரு கிராமத்தில் எப்போதாவது வரும் பேருந்தில் ஏற மக்கள் முந்தியடித்துக் கொள்வது போல், விமானங்களில் ஏற மக்கள் பரிதவித்தனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்ல அமெரிக்கப் படைகள் வானை நோக்கிச் சுட்டன. அப்போது வரை, காபூல் விமான நிலைய பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் பணி அமெரிக்க படை வீரர்களிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானின் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமே இனி காபூல் எல்லைக்குள் விமானங்கள் பாதுகாப்பாக வந்து செல்வதை எங்களால் உறுதி செய்ய முடியாது என்று கைவிரித்துவிட்டது.

தலிபான் செய்தித் தொடர்பாளர் முகமது நயீம் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், "ஆப்கானிஸ்தானில் புதிய அரசு எந்த மாதிரி அமையும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கபப்டும். சர்வதேச அளவில் அமைதியான உறவையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று கூறினார்.

துப்பாக்கி சூடா? கூட்ட நெரிசலா?

காபூல் விமான நிலையத்தில் 5 சடலங்களை சிலர் வாகனங்களில் ஏற்றுவதைப் பார்த்ததாகவும், ஆனால் அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்களா? அல்லது கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தார்களா என்று தெரியவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு ஒருவர் பேட்டியளித்துள்ளார்.

ரஷ்யா நாளை பேச்சுவார்த்தை:

ஆப்கானிஸ்தானில் ரஷ்ய தூதரக ஊழியர்கள்100 பேர் உள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்கும் வகையில் நாளை ரஷ்ய அதிபர் புடினின் சிறப்புப் பிரதிநிதி ஆப்கானிஸ்தான் செல்கிறார். இதனை அந்நாட்டு வானொலி நிலையமான எக்கோ மாஸ்கோவி தெரிவித்துள்ளது. தலிபான் பிரதிநிதியை நேரில் சந்தித்து அங்கிருந்து ரஷ்ய தூதரக அதிகாரிகளை அவர் மீட்டு வருவார் எனக் கூறப்படுகிறது.
அதேபோல் நேபாள் அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள 1500 பேரை மீட்க சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடியுள்ளது.


தவறவிடாதீர்!காபூல் விமான நிலையம்காபூல் விமானநிலையத்தில் பதற்றம்தலிபான்கள் துப்பாக்கிச் சூடு5 பேர் பலி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x